அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய மாபெரும் நடை பயணத்தை  இன்று   செவ்வாய்க்கிழமை(09-10-2018) காலை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும்  வகையிலும், அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்  இந்த நடைபயணம்  நடாத்தப்படுகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுத் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் முடிவிலேயே நடைபவனிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய் ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த நடைபயணத்தில்   நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நடைபயணத்தில் மேலும் பல மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணமாகி கிளிநொச்சி வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடையவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.