இந்தியன் 2: நாள் குறித்த படக்குழு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் நேற்றோடு முடிவடைந்ததையொட்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் நடித்த கமல் மீண்டும் அவரோடு இணைந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிறைவு விழாவில் கூறினார். விரைவாக அந்தப் படம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போது கட்சி தொடக்கம், விஸ்வரூபம் 2 ஆகிய பணிகளில் கமல் கவனம் செலுத்தினார். இயக்குநர் ஷங்கரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருக்கும் 2.O படத்தின் பணிகளில் ஈடுபட்டுவந்தார். தற்போது 2.O நவம்பர் 29ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்தியன் 2 திரைப்படத்தின் திரைக்கதை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளன. இரு படங்களுக்கும் தனித்தனி உதவி இயக்குநர்கள் குழு அமைத்து ஒரே நேரத்தில் இரு படங்களின் பணிகளையும் ஷங்கர் மேற்கொண்டு வருகிறார். நவம்பர் இறுதியில் ரஜினியின் 2.O வெளியாவதையொட்டி டிசம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடிவேணு இந்தப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரஜினி நடிக்கும் பேட்ட படத்திற்கு இசையமைத்துவரும் அனிருத் கமல் நடிக்கும் இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.