சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'

தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான்.
”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர்.
திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி என்கிற ஜாம்பவான்கள் பேரறிஞர் அண்ணா எனும் பெருந்தகைக்கு உற்ற துணையாக திராவிடர் பேரியக்கத்தின் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்யும் சூரியக் கதிர்களாக சுடர் விட்டு பிரகாசித்தனர்.
ஆனால் இந்த மும்மூர்த்திகள் இணைந்து நெடுந்தூரம் பயணிக்கவில்லை. நாத்திக கட்சியான திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதிக்கு சென்று திரும்ப ‘திருப்பதி கணேசா! திரும்பிப் போ கணேசா’ என சுவரொட்டிகள் முளைத்தன. உட்கட்சி பூசலால் மனம் வெதும்பிப் போன சிவாஜி கணேசன் பெருந்தலைவர் காமராசரை கரம் பிடித்தார்.
1970களுக்குப் பின்னர் அண்ணன் தம்பிகளாய் வலம் வந்த கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் எதிரெதிராகவும் கை கோர்த்தும் அரசியல் பயணங்களை மேற்கொண்டனர். காமராஜர் மறைவுக்குப் பின்னர் இந்திரா காந்தியின் தலைமை ஏற்றார் சிவாஜி கணேசன்.
எம்ஜிஆரின் மறைவின் போது இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தியுடன் சிவாஜி கணேசனுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என ராஜீவ் காந்தி அடம் பிடிக்க அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பிய சிவாஜி கணேசன் உருவாக்கியதுதான் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் அரசியல் கட்சி.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை அளவில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்திருந்தன. ஆனாலும் ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ்த் தேசிய கட்சி, சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழகத்தில் உருவான தமிழ்த் தேசிய கட்சி சிவாஜி கணேசனின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’.
சிவாஜி கணேசன் 1988இல் தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். அதே ஆண்டில் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் (பி) லிமிடெட்-ன் கடைசி படமான என் தமிழ் என் மக்கள் படமும் வெளியானது. இப்படம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியின் பிரசார படமாக இருந்தது. அதேநேரத்தில் அதில் இடம்பெற்ற பாடல்கள் ‘தமிழ்த் தேசிய’ அரசியலைத் தீவிரமாக பாடின.
“வாங்கிய சுதந்திரம் ஏழைகள் எங்களுக்கா.....?
பொய்த் தேசியம் பேசிடும் கோழைகள் உங்களுக்கா?
பொறுத்திருந்த சிங்கம் இது
புரட்சியில் இறங்குதடா”
என்கிற பாடல் அன்று சிவாஜி கணேசனின் ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் கிராமங்கள் தோறும் ஒலிக்கவிடப்பட்டன. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்ட கதி சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணிக்கும் ஏற்பட்டது. 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றுப் போனார். தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் கட்சியையே கலைத்துவிட்டு பின்னாளில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவராக சிறிது காலம் பணியாற்றினார்.
தீவிர தேசிய அரசியல் பேசிய சிவாஜி கணேசன் ஒருகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முயன்று பார்த்து தோற்றுப் போனார். ஆனால் இன்றைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மருந்துக்குக் கூட சிவாஜி கணேசனின் தமிழ்த் தேசியம் தொடர்பான நூலிழை நகர்வைக் கூட வரலாற்றில் பதிவு செய்யாமல் கடந்து சென்று கொண்டே இருப்பதும் விசித்திரமே!
மதிவாணன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.