தேர்வுக்குழுவை விமர்சித்த ஹர்பஜன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடன் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் சரியாக விளையாடாத நிலையில் தேர்வுக்குழு அவரை நீக்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம், ஆசிய கோப்பை எனத் தொடர்ந்து விளையாடி வரும் பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர்குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவுக்கு இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை.

இந்த தேர்வு குறித்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு இடமில்லை. உண்மையில் தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது இதன் விஷயம் தெரியுமா? தெரிந்தாலும் சொல்லுங்கள் ஏனெனில் என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் ஷர்மா. ஆசியக் கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் மொத்தம் 317 ரன்களை குவித்தார். கடந்த ஜூலை மாதம் 2ஆவது இடத்தில் இருந்த ரோஹித் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தற்போது அதே இடத்துக்கு வந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.