மருத்துவப் பணியிடங்கள்: டிச.9இல் தேர்வு!

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் டிசம்பர் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் இதயநோய்களைக் கண்டறியும் சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, எல்லா நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சுகாதாரத் துறை உயர் அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சலுக்கு ரூ.450 மதிப்புள்ள 10 மாத்திரைகள் அடங்கிய அட்டைகள், அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
"டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கூடுதல் செவிலியர்களை மாதம் ரூ.14,000 ஊதியத்தில் பணி நியமனம் செய்துகொள்ள, அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்குத் தனி அதிகாரத்தைத் தமிழக அரசு முதன்முதலாக வழங்கியுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதியன்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1,884 எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெற்ற அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவப் பணியில் பணி அமர்த்தப்படுவார்கள்" என்று கூறினார்.
இதனையடுத்து, புதுக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று மக்களிடையே காய்ச்சல் குறித்து உரையாடினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.