கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்!

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.

பெல்லாரி தொகுதியை பாஜகவின் கோட்டையாகவும் வைத்திருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் பெல்லாரி மக்களவைத் தொகுதியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது பாஜக.
இதற்கிடையே கர்நாடகாவை அதிரவைத்த அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சையது அகமது பரீத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அமலாக்கத் துறை அதிகாரிகளும் அம்பிடண்ட் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜனார்த்தன ரெட்டிக்கும் நிதி நிறுவன மோசடியில் பங்கு இருப்பது தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியை கர்நாடக போலீசார் தேடிவந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அவரை கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த ஜனார்த்தன ரெட்டி, “நான் தவறாக எதையுமே செய்யவில்லை. நான் தவறானவன் என்பதை நிரூபிக்க காவல் துறையிடம் ஓர் ஆவணம் கூட கிடையாது. ஊடகங்களிடம் தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும் தான் தலைமறைவாக இல்லை என்றும், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 10) மாலை காரில் வந்த ஜனார்த்தன ரெட்டி தனது வழக்கறிஞர்களுடன் பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். விசாரணைக்குப் பிறகு ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜனார்த்தன ரெட்டிக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு நிராகரிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.