அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதிக்கு தகுந்த தீர்ப்பை அளிக்கும் உயர்நீதிமன்றம்! - சம்பந்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக்

கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசியலமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
'நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கவும், கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அது நீக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதாக இருந்தால், நான்கரை ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும்.
மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்பதிலும், தான் நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் தோற்கக் கூடாது என்பதிலுமே குறியாக இருந்தார்.
ஆனால், அவரின் திட்டம் படுதோல்வியை நோக்கிச் செல்கையில் அந்த அவமானத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக நாடாளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்துள்ளார். அவர் தனது தன்னிச்சையான முடிவுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வழங்கிய ஆணையை மீறி விட்டார்.
கடந்த மூன்று வருடக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த நடவடிக்கைகள் மந்த கதிலேயே முன்னெடுக்கப்பட்டன. குறித்த விடயங்களை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுத்திருக்க முடியும். எனினும் அவ்வாறு செய்யவில்லை.
தமிழ் மக்களின் ஒற்றுமையும், ஒருமித்த செயற்பாடுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலமாக அமைந்துள்ளது“ என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.