நடிகர் சங்கம் புகார்: தயாரிப்பாளர் மறுப்பு!

96 படத்தில் விஜய்சேதுபதிக்கும், கத்திசண்டை படத்தில் விஷாலுக்கும், வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் சம்பள பாக்கி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்குத் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளை நினைவுபடுத்தியிருக்கும் இந்தப் படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வெளியீட்டின் போதும் தயாரிப்பு தரப்பில் பிரச்சினை ஏற்பட்டுத்தான் வெளியானது. இதற்கு நடிகர் விஷால்தான் காரணம் என்று அந்த நேரத்தில் சொல்லப்பட்டாலும், அதை விஜய் சேதுபதி மறுத்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட படங்களில் நடித்த நடிகர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால், எந்த ஒரு நிகழ்வுக்கும், படங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒத்துழைப்பும் நல்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் தயாரிப்பாளர் நந்தகோபால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நந்தகோபால், “விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு இவர்களுடன் நான் என் மனசாட்சிக்கு விரோதமாக எந்த மாதிரியும் தவறாக நடந்துகொள்ளவில்லை. சம்பள பாக்கி என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு சொன்ன சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன். அதேபோல 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தருகிறேன் என்று சொன்ன சம்பளப் பணத்தை வழங்கிவிட்டேன். இவர்களிடம் நான் எப்போதுமே தவறாக நடந்துகொள்ளவே இல்லை. வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் வந்தன. அதனால் சில உடன்படிக்கைகள் நடைபெறாமலே போய்விட்டன. மற்றபடி, விஷாலுக்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி வைத்திருக்கிறேன் என்று சொல்வது தவறானது. துப்பறிவாளன் படத்தை தாம் வாங்க மட்டுமே செய்ததால் அதை சம்பள பாக்கி என்று கூற முடியாது ” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இவ்விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் திருமலை, “நடிகர் சங்கத்தின் கடிதம் அனைத்துத் தயாரிப்பாளர்களையும் மிரட்டும் வகையில் இருக்கிறது. சர்வாதிகாரப் போக்குடன் விஷால் முடிவெடுத்திருக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை நடிகர் சங்கம் மூலம் விஷால் காட்டியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் வந்த பிறகு, சங்கம் நடுத்தெருவுக்கு வந்தது தான் மிச்சம் . இதுவரை ஒருநாள் கூட அமர்ந்து அவர் சங்கத்திற்காக வேலை செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.