சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

சென்னையில் வசிக்கும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளதாக அடையாறு புற்றுநோய் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக அடையாறு புற்றுநோய் மையம் சென்னையில் வசிக்கும் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னையிலுள்ள பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோயானது (2012-2015 வரையில் )40.8 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. முன்னதாக (2006-11 வரையில்) மார்பக புற்றுநோயானது 33.9 விழுக்காடுதான் இருந்தது. மார்பக புற்றுநோயுடன் கருப்பை புற்றுநோய்களும் மற்றும் கருமுட்டை புற்றுநோய்களும் 48.3 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.

இதற்கு உடலுழைப்பு தவிர்த்த வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்(நார்ச்சத்து இல்லாததும் அதிகமான மசாலாக்களை கொண்டதுமான துரித உணவுகள்)அதிகமான அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை முறையும் முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்த ஆய்வில், முன்னதாக சென்னையிலுள்ள பெண்களின் மத்தியில் கருப்பை புற்றுநோய் அதிகமாக இருந்தது தற்போது குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கல்வி அறிவு கூடியதும், மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது குறித்தும்,சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு கூடியதுமே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

மார்பக புற்றுநோய் குறித்து அச்சப்படத்தேவையில்லை .மார்பகங்களை சுயமாக பரிசோதனை செய்து ஏதாவது வித்தியாசமான கட்டிகள் இருந்தால் உடனடியாக அதற்கான பரிசோதனைகள் மேற்கொண்டு உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து உடனடியாக சிகிச்சைகளை தொடங்குவது பயனளிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் மருத்துவர் சாந்தா கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 60லிருந்து 70 விழுக்காடு வரை கால தாமதமான நிலையிலேயே பெண்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். தற்போது பெண்கள் கால தாமதமாக வருவது 30லிருந்து 40 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனாலும் இது போதாது. பெண்கள் சில மாதங்களுக்கு ஒரு முறையாவது கருப்பை தொடா்பாகவும் மார்பகம் தொடர்பாகவும் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.