விக்னேஷ் சிவனின் ‘வேற லெவல்’ காத்திருப்பு!
தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
சிலர் சினிமா பிரபலங்களைக் கொண்டாடுவார்கள், சிலர் விளையாட்டு வீரர்களையும் கொண்டாடுவார்கள். சினிமாத்துறையிலிருந்து விளையாட்டு வீரர்களைக் கொண்டாடும் சிலரும்கூட உண்டு, அதற்கு உதாரணம் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்திய கிரிக்கெட் அணி வீரரான எம்.எஸ்.தோனியின் அதிதீவிர ரசிகரான அவர் தோனியை ஏகத்துக்கும் புகழ்வது வழக்கம்.
புகழ்வதில் சில நேரம் டாப் கியரில் செல்லும் அவர், இந்தியாவுக்கு தோனிதான் பிரதமராக வரவேண்டும் என மிக சீரியஸாகவும்கூட கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் ஆனால் அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாத தோனியை பிரதமராக வரவேண்டும் என ஏன் சொல்கிறார் எனக் கேட்டு விக்னேஷ் சிவனின் அந்தக் கருத்தை அப்போது பலர் விமர்சனமும் செய்தனர்.
பின்னர் சில நாட்களாக அடக்கி வாசித்து வந்த நிலையில் ,மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியிலிருந்து தோனி கழற்றிவிடப்படவே வெகுண்டெழுந்தார் விக்னேஷ் சிவன். நேரடியாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையே (பிசிசிஐ) தாக்கிப் பேசிய அவர், தோனிக்கே இந்திய அணியில் இடமில்லையா எனக் கேட்டு கோபமடைந்ததுடன், தோனி இல்லாமல் இந்திய அணியால் எதையும் ஜெயிக்க முடியாது எனும் தொனியிலும் ட்விட்டரில் கூறினார்.
மேலும் இது மோசமான தேர்வுக் கமிட்டி என பிசிசிஐயைச் சாடிய அவர் பிசிசிஐயை இனி ஆண்டவன்தான் காப்பாத்தவேண்டும் எனவும் கூறினார். இந்தக் கருத்தால் மீண்டும் சலசலப்புகள் உண்டாகின. தோனி ஃபார்மில் இல்லாததால்தான் நீக்கப்பட்டுள்ளார் இது கூடத் தெரியாதவரா இந்த விக்னேஷ் சிவன் என விமர்சனங்கள் கிளம்பின.
இப்படியான நிலையில், தோனியைச் சந்தித்து
அவருடன் தான் எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (நவம்பர் 10) பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்தப் பதிவில் தோனியைச் சந்திப்பது தனது வாழ்நாள் கனவு எனக் கூறியுள்ள அவர், தோனியைச் சந்தித்தது மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது நடக்கக் காரணமான கடவுளுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இதையெல்லாம் கூறிய அவர் இதோடு மட்டும் முடிக்கவில்லை. தனது ரோல்மாடல் இன்ஸ்பிரேஷன் எனத் தோனியைக் குறிப்பிட்டுள்ள அவர், தோனி இந்தியாவை ஆளும் அந்த ஒரு நாளைக் காணக் காத்திருக்கிறேன் எனக் கூறி ஃபினிஷிங் டச் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
கருத்துகள் இல்லை