டெல்லி :நவ-22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

பாஜவுக்கு எதிராகத் தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் 22ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விலகினார். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அதன்படி, நேற்று (நவம்பர் 10), காங்கிரஸ் பொது செயலாளர் அசோக் கெலாட்டை அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, "பாஜவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் இணையும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்காக டெல்லியில் வரும் 22ஆம் தேதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். இதில் பாஜகவுக்கு எதிராக அணியை முன்னெடுத்துச் செல்வது, அமைப்புரீதியான கட்டமைப்பை உருவாக்குவது, எதிர்கால நடவடிக்கை ஆகியவை பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், தேசத்தைக் காப்பாற்றவும், தேசிய நிறுவனங்களைக் காப்பாற்றவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதிகளில் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் இரு அரசியல் தளங்கள் மட்டுமே உள்ளன. அவை பாஜக மற்றும் பாஜகவுக்கு எதிரானவை. அரசியல் கட்சிகள் தான் அவர்கள் யாருடன் இணைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எங்களுடன் இணையவில்லை என்றால் அவர்கள் பாஜகவில் உள்ளனர் என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக அரசு டெல்லி ரிமோட் கண்ட்ரோலில் உள்ளது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கொள்கையும் பாஜக கொள்கையோடு ஒத்துப் போகிறது என்றார் சந்திரபாபு நாயுடு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.