கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53 ரன்களும், டி பிராவோ 43 ரன்களும் சேர்த்தனர்.
சவாலான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் அவர் பங்குக்கு 17 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து வந்த ரிஷப் பந்த், தவனுடன் இணைந்தார். இந்த தொடர் முழுவதும் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறிய இவர்கள் இருவரும் இந்தப் போட்டியில் அவர்களது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதற்கேற்றாற்போல் இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தனர்.
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அப்போது களத்தில் இருந்த இருவரும் சூழ்நிலைக்கு ஏற்ப நன்கு பரிச்சயம் ஆகி இருந்ததால் ஆட்டம் எளிதில் முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
கீமா பால் வீசிய 19ஆவது ஓவரில் ரிஷப் பந்த்தின் விக்கெட் உட்பட 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனை என்றே கூறலாம். அதுவரை 10 ரன்களுக்கு மிகாமல் இருந்த இந்தியாவின் ரன்ரேட் அந்த ஒரு ஓவரில் சட்டென்று சரிந்தது. இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன.
ஃபேபியன் ஆலன் வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. ஸ்கோர் சமன் ஆனது. அதுவரை நன்கு ஆடிவந்த தவன் கடைசி கட்டத்தில் தடுமாறத் தொடங்கினார். 4ஆவது பந்தை எதிர்கொண்ட தவன் அதனை டாட்-பால் ஆக்கினார். இதனால் நெருக்கடிக்கு ஆளான அவர் 5ஆவது பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்து போலார்டிடம் கேட்ச் ஆனார். கடைசி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. களத்தில் மனிஷ் பாண்டே இருந்தார். 1 ரன் ஓடுவதைத் தடுப்பதற்காக வட்டத்திற்குள் ஃபீல்டிங் பலப்படுத்தப்பட்டது.
லெக் ஸ்டம்ப்பை குறிவைத்து வீசப்பட்ட கடைசி பந்தை மனிஷ் பாண்டே பந்துவீச்சாளரை நோக்கி தட்டிவிட்டார். அதனை ஆலன் சரியாகப் பிடித்திருந்தால் ரன் அவுட் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால், அவர் அதனை சரியாகப் பிடிக்கத் தவறியதால் பந்து மிட் விக்கெட் திசையிலிருந்த ஹெட்மரை நோக்கி சென்றது. அவர் அந்த பந்தைப் பிடிப்பதற்குள் அங்கு 1 ரன்னை கடந்து விட்டனர்.
எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை இந்திய அணியினர், கடைசி கட்டம் வரை பரபரப்பாக எடுத்துச் சென்று த்ரில்லாக வென்றனர். ஷிகர் தவனுக்கு ஆட்ட நாயகன் விருதும், குல்தீப் யாதவுக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தன.
தொடரும் சோகம்
இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டு ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பவுள்ளது.
2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆசிய மண்ணில் ஒரு டி20 தொடரைக்கூட வென்றதில்லை. உலகக் கோப்பைக்குப் பிறகு (2016) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-0 எனவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 எனவும் அந்த அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.