பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை!

பொய்ச் செய்திகளைப் பரப்பி சமுதாயத்தில் வன்முறையை திணிக்கும்
முயற்சிகள் நடைபெறுகின்றன, இதை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்துள்ளார்.
 (நவம்பர் 12) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ்,
“காரணமில்லாமல் யாரையும் வெறுக்க வைக்கும் சம்பவங்கள், கடந்த நான்கரை வருட பாஜக ஆட்சியில் அதிகமாக நடந்திருக்கின்றன. படித்த மக்களைக் கூட நம்ப வைக்கும் அளவுக்கும் அமைப்பு ரீதியாக இந்த பொய்ச் செய்திகளை வலது சாரி இயக்கங்கள் தீவிரமாக பரப்பி வருகின்றன. தங்களை அறியாமலேயே ஒரு மதத்தின் மீது ஒரு சாதியின் மீது வெறுப்பைக் கக்க வைக்கும் வேலைகளை அவர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “வலது சாரி இயக்கத்தின் இந்த ஆபத்தான போக்கை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் நமக்கு வசதியாக சிலவற்றை நம்புகிறோம். அந்த பலவீனத்தைப் பயன்படுத்திதான் நம்மை வேட்டையாடப் பார்க்கிறார்கள். இதை நாம் உணர வேண்டும். நாம் கேள்விப்படும் செய்தியை விசாரித்து உண்மையா என்று அறிய வேண்டும்” என்று எச்சரித்த பிரகாஷ் ராஜ்,
“இந்த ஆபத்தை ஒவ்வொரு செய்தி நிறுவனமும், ஒவ்வொரு எழுத்தாளரும், ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயல்பட வேண்டும். காட்டில் தீ பிடிக்கிறது என்றால் அது தீயின் மீதான குற்றம் மட்டுமல்ல மரங்களின் மீதும் தவறு இருக்கிறது” என்று குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், இந்நாட்டில் செய்தி ஊடக நிறுவனங்கள் விலை போய்விட்டன, படித்தவர்கள்தான் பாமர மக்களைத் திசை திருப்புகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.