முப்படைத் தளபதிகளுடன் சிறிசேனா ஆலோசனை!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை டிசம்பர் 7ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 13) தீர்ப்பளித்ததையொட்டி, அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் அங்கே அரங்கேறி வருகின்றன.
நவம்பர் 9ஆம் தேதி அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்த நீதிபதிகள், டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் இந்த வழக்கின் முழுமையான விவாதம் நடைபெறுமென்றும் டிசம்பர் 7ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பை அடுத்து இலங்கை முழுதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அதிபர் எதிர்ப்புக்கட்சியினர். மேலும், “இது முதல் வெற்றி... இலங்கை ஜனநாயகத்தின் அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும்” என்று ரனில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்தார்.

தீர்ப்பு வந்த சில மணித்துளிகளிலேயே இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று (நவம்பர் 14) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிகாரபூர்வ உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் இன்று காலை 8.30க்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கும் அவர் நேற்று அழைப்பு விடுத்தார்.
இன்று நாடாளுமன்றம் கூடும் நிலையில் ரனில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆயத்தங்களை நேற்று மாலை முதல் தீவிரப்படுத்தினார். இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ராஜபக்‌ஷே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று இரவு தகவல்கள் பரவின. ஆனால் ராஜபக்‌ஷேவின் மகன் நமல் ராஜபக்‌ஷே இதை மறுத்தார்.
“மகிந்த ராஜபக்‌ஷே ராஜினாமா என்பது தவறான தகவல்கள். இந்தத் தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்புதான். இறுதி தீர்ப்பு அல்ல. முழுமையான வாதங்கள் முடிந்து அடுத்த மாதமே இடைக்காலத் தீர்ப்பு வருகிறது. இதற்கிடையில் நாடாளுமன்றத்துக்கு நாங்களும் செல்வோம்” என்று பதில் அளித்துள்ளார் நமல் ராஜபக்‌ஷே.

இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு கொழும்பில் முப்படைத் தளபதிகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி விவாதித்ததுதான் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று இரவு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தளபதிகள், இலங்கை போலீஸ் தலைவர் ஆகிய உயர் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் அதிபர் சிறிசேனா. இந்த ஆலோசனையின்போது நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் இலங்கையின் அனைத்துப் பொது ஊழியர்களும் நீதிமன்றத்துக்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதிபரின் உத்தரவுகளுக்கு அடிபணியக் கூடாது என்றும் ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், இந்த நிலையில்தான் முப்படைத் தளபதிகளும் அதிபர் சிறிசேனாவின் தலைமையில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் சிறிசேனா, “என்னுடைய முதல் துருப்புச் சீட்டைதான் நான் இதுவரை பயன்படுத்தியுள்ளேன். என்னிடம் இன்னும் பல துருப்புச் சீட்டுகள் உள்ளன. வேளை வரும்போது அவற்றைப் பயன்படுத்துவேன்” என்று கூறியிருந்தார் அதிபர் சிறிசேனா.
இதை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை ரனில் மீண்டும் பிரதமர் ஆவதைத் தடுக்க ராணுவத்தின் உதவியை சிறிசேனா நாடியிருப்பாரோ என்ற அச்சமும் கொழும்பில் பரவிக் கிடக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.