அடுத்ததும் தளபதி தீபாவளி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. விஜய்யின் அடுத்த படம் பற்றிய யூகங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சமீபகாலமாக விஜய் நடித்த படங்கள் சர்ச்சைகளை விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூல் ஈட்ட தவறுவதில்லை. தனது படங்களின் வசூல் சாதனையை அடுத்தடுத்து அவரே முறியடித்துவருகிறார். வெற்றிகளைப் பெற்றுத்தரும் கூட்டணியுடன் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். துப்பாக்கி, கத்தி வெற்றிகளைத் தொடர்ந்து முருகதாஸுடன் இணைந்த சர்கார் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததால் தற்போது தனது 63ஆவது படத்தையும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார்.

அட்லீ, விஜய் மூன்றாவதாக இணையும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றவுள்ளார். மெர்சல் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஜி.கே.விஷ்ணு இந்த படத்திலும் இணைந்துள்ளார். ரூபன் எல்.ஆண்டனி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை அனல் அரசு மேற்கொள்கிறார்.

மெர்சல், சர்கார் என தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் படங்கள் ரிலீஸான நிலையில் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்று மாலை இதன் அறிவிப்பு வெளியான நிலையில் ட்விட்டரில் #vijay63 என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
Powered by Blogger.