குப்பை விவகாரம்: புத்தளத்தில் மறியல் போராட்டம்

குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிராக புத்தளம்- அருவாடு புகையிரதப் பாதையை மறித்து மறியல் போராட்டத்தில் மக்கள் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.
சர்வ மதத்தலைவர்கள் தலைமையில் இன்று காலை 9 மணியளவில், மணல்குன்று
பாதையின் பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் இரு பகுதிகளிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குறிப்பிட்டதாவது, “கொழும்பு குப்பைகளை புத்தளம் சீமேந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான அருவாக்காட்டில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இம்மறியல் போராட்டத்தை நாம் முன்னெடுத்தோம்.
மேலும் புத்தளம், அருவாக்கட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடக்கோரி கடந்த 50 நாட்களாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியா கிரகப் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் புத்தளம்-பாலாவியில் இருந்து  அருவாக்காட்டுக்கு செல்லும் புத்தளம் சீமேந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான புகையிரதத்தை மறித்து போரட்டத்தில் ஈடுபட்டோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவும், எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பாக  சீமேந்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் கலந்துரையாடி முடிவுக்கு வருவோமென உறுதி வழங்கியதை அடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கலைந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.