களவாணி மாப்பிள்ளை - சினிமா விமர்சனம்

'நம்ம ஊரு பூவாத்தா', 'ராக்காயி கோயில்', 'பெரிய கவுண்டர் பொண்ணு', 'கட்டபொம்மன்', 'நாடோடி மன்னன்', 'மாப்பிள்ளை கவுண்டர்' உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜ புஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரித்துள்ள திரைப்படம் 'களவாணி மாப்பிள்ளை'.



ராஜ புஷ்பா பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்வரி மணிவாசகம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, 'மகாநதி' சங்கர், 'மொட்டை' ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, 'கிரேன்' மனோகர், 'நாஞ்சில்' விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - சரவணன், அபிமன்யு, இசை - என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் - மோகன் ராஜன், ஏக்நாத், கலை - மாயா பாண்டி, படத் தொகுப்பு - பொன் கதிரேசன், நடனம் - தினேஷ், சண்டை பயிற்சி - திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை - சிவச்சந்திரன், நிர்வாகத் தயாரிப்பு - ஸ்டில்ஸ் ராபர்ட், இணை தயாரிப்பு - திருமூர்த்தி, தயாரிப்பு - ராஜேஸ்வரி மணிவாசகம், எழுத்து, இயக்கம் - காந்தி மணிவாசகம்.

கிராமத்தில் தனது தாயார் ரேணுகாவுடன் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார் நாயகன் தினேஷ். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகச் சொல்லி சைக்கிள் ஓட்டவோ, பைக் ஓட்டவோ, கார் ஓட்டவோ தினேஷை அவரது அம்மா ரேணுகா அனுமதிக்கவில்லை. அதனால் தினேஷ் இன்றுவரையிலும் எதையும் கற்றுக் கொள்ளாமலேயே இருக்கிறார்.

அதே ஊரில் இருக்கும் முனீஸ்காந்த், தினேஷிற்கு சின்னப் பிள்ளையில் இருந்தே எதிரியாக இருக்கிறார். இப்போது முனீஸ்காந்த் ரியல் எஸ்டேட் ஓனராக செல்வச் செழிப்போடு இருக்கிறார். இவருக்கும் தினேஷுக்கும் இப்போதும் முட்டல் மோதல்தான்..!

அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு நாள் பைக் கற்றுக் கொள்ள நினைக்கும்போது தினேஷுக்கு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தையொட்டி ஹீரோயின் அதிதியுடன் தினேஷுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதிதியின் அநியாய அழகு தினேஷை மயக்க.. அவரைக் காதலிக்கத் துவங்குகிறார்.

அதிதி கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். தினேஷ் இருக்கும் ஊரில் மெடிக்கல் கேம்ப் நடத்த வரும் அதிதியை மேலும், மேலும் நெருங்கி தனது காதலைச் சொல்கிறார் தினேஷ். அதிதியும் சில, பல பந்தாக்களுக்குப் பிறகு தினேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அதிதியின் தாயான தேவயானி பெரும் பணக்காரி. இவருடைய கணவர் ஆனந்த்ராஜ். இவர்களுக்கு அதிதி ஒரே பொண்ணு. எல்லா ஆஸ்தியும் அதிதிக்கே என்னும் நிலையில் அதிதியும் தினேஷை காதலிக்கத் துவங்குகிறார்.

தேவயானிக்கு பொய் சொன்னாலே பிடிக்காது. "கார் ஓட்டத் தெரியும்" என்று பொய் சொன்ன குற்றத்திற்காகவே தனது கணவர் ஆனந்த்ராஜை 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தாலும் தள்ளியே வைத்திருக்கிறார் தேவயானி. ஆனந்த்ராஜூம் வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் ரப்பர் ஸ்டாம்ப்பான குடும்பத் தலைவராக இருந்து வருகிறார்.

இப்போது இவர்களின் காதல் தேவயானிக்கு தெரிய வர.. அவரும் இந்தக் காதலுக்கு ஒத்துக் கொள்கிறார். தினேஷிடம் "கார் ஓட்டத் தெரியுமா..?" என்று தேவயானி எதேச்சையாக கேட்க "தெரியும்." என்று அவருடைய குணம் தெரியாமலேயே பொய் சொல்லிவிடுகிறார் தினேஷ்.

இதன் பின்புதான் தேவயானியின் பொய் பிடிக்காத குணம் தினேஷுக்கு தெரிய வருகிறது. இதனால் ஏற்படப் போகும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பதிலாக உண்மையைச் சொல்லிவிடலாம் என்கிறார் தினேஷின் அம்மா ரேணுகா. ஆனால் தினேஷும், அதிதியும் சேர்ந்து "இப்போது சொல்ல வேண்டாம். கல்யாணம்வரைக்கும் எப்படியாவது சமாளித்துவிடலாம்." என்று சொல்லி ரேணுகாவை சமாதானப்படுத்துகிறார்கள்.

தினேஷ்-அதிதி காதலை ஏற்றுக் கொள்ளாத ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த் மூலமாக காதலர்களைப் பிரிக்கப் பார்க்கிறார். தினேஷோ தான் எப்படியாவது தேவயானியை சமாளித்து கல்யாணம் செய்துவிடலாம் என்று நினைக்கிறார். இதில் யாருடைய எண்ணம் பலித்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

1985-ம் வருட காலத்திய கதை. கொஞ்சம் டிங்கிரிங் செய்து புதியதாக்கலாம் என்று நினைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் காந்தி மணிவாசகம். ஆனால் இதற்கேற்றாற் போன்று நகைச்சுவை வரும் அளவுக்கு இயக்கமும், வசனமும் அமையாதது அவருடைய துரதிருஷ்டம்.

தினேஷ், அதிதி மேனன் காதல் போர்ஷனை ரசனையாக உருவாக்கியவர் அதன் பின்னான காட்சிகளை சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கியிக்கிறார். தேவயானிக்கு பிடிக்காத 'பொய் சொல்வது' என்கிற ஒரு விஷயத்தை வைத்தே இன்னும் நிறையவே நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதைகளை செய்திருக்கலாம். அதில் கோட்டைவிட்டுவிட்டதால் படம் பற்றிய 'மவுத் டாக்' வெளியில் வரவில்லை என்பதுதான் உண்மை.

தினேஷுக்கு நிச்சயம் இது புதிய கதைதான். புதிய களம்தான். அடித்து ஆட வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். இது போதாது என்று சொல்லும் அளவுக்குத்தான் இவருக்கான காட்சிகளில் இயக்கம் தெரிகிறது.

அதிதி மேனன்.. மிக அழகு.. இவர் ஏன் இன்னமும் லைம் லைட்டுக்கு வரவில்லை என்றே தெரியவில்லை. நடிப்பும் மிக அழகாக வருகிறது. நடனத்திலும் மின்னுகிறார். முதல் பாதியில் தினேஷ்-அதிதி மேனன் காதல் போர்ஷன்தான் படத்தை கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்துகிறது. அந்த சுவாரஸ்யத்தை அப்படியே மெயின்டெயின் செய்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

'வணங்காமுடி' என்கிற பெயரில் இடையில் புகுந்த மொட்டை ராஜேந்திரன் போர்ஷன் அத்தனைக்கும் ஆப்பினை சொருகிவிட்டது. அதேபோல் முனீஸ்காந்தின் சவ சவ திட்டங்களும் திரைக்கதையை சொதப்பலாக்கிவிட்டன.

முனீஸ்காந்தின் புயல் வேக டயலாக் டெலிவரியில் ரசிக்க முடிந்தாலும் சிரிப்பு வரவில்லை. அதே சமயம் ஆனந்த்ராஜின் நடிப்பும் சிறப்பாகத்தான் இருக்கிறது. இவரும் சாம்ஸும் சேர்ந்து செய்யும் வசன கலாட்டா அருமை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் சிரிக்கவும் முடிந்திருக்கும். சிற்சில இடங்களில் சிச்சுவேசன் டயலாக்கை ஆனந்த்ராஜ் எடுத்துவிடும்போது மிகவும் ரசிக்க முடிகிறது.

அம்மாவாக ரேணுகா.. குறையில்லாமல் நடிப்பில் நிறைவாகவே நிறைவு செய்திருக்கிறார்.

தேவயானி ஒவ்வொரு வசனத்தையும் மென்று, கடித்து, துப்பும்போது ஏற்படும் வேதனை சொல்லி மாளவில்லை. அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு "அப்படியா மாப்ளை.." என்று தேவயானி காட்டும் எக்ஸ்பிரஷன்களை வைத்து தமிழக அரசின் செய்தித் தொடர்புத் துறை 100 டாக்குமெண்ட்ரிகளை தயாரிக்கலாம். அந்த அளவுக்கு செயற்கைத்தனம்..!

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் படத்தின் இசைதான். என்.ஆர்.ரகுநந்தனின் இன்னிசையில் நான்கு பாடல்களுமே திரும்பத் திரும்ப கேட்கும் ரகம். அனைத்து பாடல்களிலுமே பாடல் வரிகள் எளிதாக காதில் புகும் வண்ணமாக இசையமைத்திருக்கிறார் ரகுநந்தன்.

'என்ன புள்ள செஞ்ச' 'வா கள்ளி முன்னால' 'ஒரே ஒரு காரு' 'குறுஞ்சி குறிஞ்சி பூ' ஆகிய நான்கு பாடல் காட்சிகளையும்கூட ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள். 'என்ன புள்ள செஞ்ச' அழகான மெலடி என்றால், 'வா கள்ளி முன்னால' பாடலும், பாடல் காட்சியும் செம ஆட்டம். இந்தப் பாடல் காட்சியில் ஒளிப்பதிவும், நடனமும் இசைக்கு போட்டி போட்டிருக்கின்றன.

கிராமத்துக் கதைகள் தேவைதான். ஆனால் அவை இன்றைய நிஜ வாழ்க்கையையும் பிரதிபலிக்க வேண்டும். அதே சமயம் லாஜிக் எல்லை மீறலாகவும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே ரசிகர்கள் பார்த்து, பார்த்து சலித்தக் கதையாகவும் இருத்தல் கூடாது. பார்த்த, கேட்ட கதையாக இருந்தால் ட்ரீட்மெண்ட் மிக, மிக வித்தியாசமானதாக இருக்க வேண்டும். இப்படியிருந்தால்தான் இது போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்கும்..!

எப்படியிருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு கமர்ஷியல் படமாக, பொழுது போக்குச் சித்திரமாக இந்தப் படத்தை தயாரித்து உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் காந்தி மணிவாசகம். புதிய இயக்குநர் என்பதால் குறைகளை பெரிதாக்காமல் நிறைகளை அதிகமாக்கி அவரைப் பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.