பில்லா பாண்டி - சினிமா விமர்சனம்..!

ஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். 'மேயாத மான்' இந்துஜா, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.



மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு - K.C.பிரபாத், இயக்கம் - ராஜ் சேதுபதி, கதை, திரைக்கதை, வசனம் - M.M.S.மூர்த்தி, ஒளிப்பதிவு - ஜீவன், இசை - இளையவன், படத் தொகுப்பு - ராஜா முகம்மது, கலை - மேட்டூர் சௌந்தர், நடனம் - கல்யாண், விஜி, சாண்டி, சண்டை பயிற்சி - சக்தி சரவணன், பாடல்கள் - கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் - தம்பி பூபதி, மக்கள் தொடர்பு - நிகில்.

இந்த 'பில்லா பாண்டி' படத்தின் களம் 'அனைத்தலப்பட்டி' என்னும் ஊர். இந்த ஊரில் 'தல' அஜீத்தின் ரசிகர் மன்றம் வைத்து அமர்க்களம் செய்து வருகிறார் பாண்டி என்னும் ஆர்.கே.சுரேஷ். அஜீத்தின் 'பில்லா' படத்தின்போது ரசிகர் மன்றத்தை அமைத்ததால் 'பில்லா' பாண்டி என்றே ஊருக்குள் அழைக்கப்படுகிறார்.

வீடு கட்டும் வேலை பார்த்து வருகிறார் சுரேஷ். கிடைக்கும் பணத்தையெல்லாம் வீட்டுக்குக்கூட கொடுக்காமல் மன்றச் செலவுகளுக்கே செலவழித்து வருகிறார். இவருடைய சொந்தத் தாய் மாமன் மகளான சாந்தினியை தீவிரமாய் காதலித்து வருகிறார்.

ஆனால் சாந்தினியின் அப்பா மாரிமுத்துவுக்கு சுரேஷை கண்டாலே பிடிக்கவில்லை. "வெட்டிப் பயல்.." "கையில் காசில்லை." "சேர்த்து வைக்கத் தெரியவில்லை." என்று பலவித காரணங்களைச் சொல்லி இந்தக் காதலுக்கு ஓகே சொல்ல மறுக்கிறார்.

இந்த நிலையில் பக்கத்து ஊரில் இருக்கும் சங்கிலி முருகனின் வீட்டைக் கட்டுவதற்காக செல்கிறார் சுரேஷ். வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் சங்கிலி முருகனின் பேத்தியான இந்துஜா, சுரேஷின் நல்ல குணங்களை பார்த்து அவரை ஒரு தலையாய் காதலிக்கிறார்.

சுரேஷ் தன் ஊரில் தன்னுடைய முறைப் பெண்ணை காதலிப்பது தெரியாத இந்துஜா, தன்னுடைய அப்பாவிடம் தான் சுரேஷை காதலிப்பதாகவும், அவருடன் ஏற்கெனவே 'வாழ்ந்துவிட்டதாகவும்' ஒரு பொய்யைச் சொல்லிவிடுகிறார். இதனால் கோபமான இந்துஜாவின் அப்பா அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு செல்கிறார்.

செல்லும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இந்துஜா மட்டும் தப்பிக்க மற்றவர்கள் உயிரிழக்கிறார்கள். இந்துஜாவுக்கும் தலையில் அடிபட்டு அவர் 10 வயது சிறுமிக்கான குணமுள்ளவராக மாறிவிடுகிறார்.

தன்னால்தானே இது அத்தனையும் நடந்தது என்று நினைத்து உள்ளுக்குள் வருந்துகிறார் சுரேஷ். சில நாட்களில் இந்துஜாவின் தாத்தா சங்கிலி முருகனும் இறந்துவிட.. இந்துஜா அனாதையாகிறார்.

இந்துஜாவை அப்படியே அனாதையாகவிட மனசில்லாமல் அவரை தன்னுடைய ஊருக்கு, தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் சுரேஷ். இதனால் அவருக்கும் சாந்தினிக்குமான திருமணம் நிற்கும் சூழல் ஏற்படுகிறது.

இறுதியில் நிலைமை என்னவாகிறது..? சுரேஷ் யாரை திருமணம் செய்தார்..? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

'தர்மதுரை' படத்தில் தயாரிப்பாளராகவும், 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாகவும் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், இந்தப் படத்தில் நாயகனாக மாறியிருக்கிறார்.

இப்போது நாயகர்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட அடையாளமும் தேவையில்லாத நிலைமை தென்படுவதால், ஹீரோ வேடத்திற்கு துணிந்து இறங்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

தெனாவெட்டாக அஜீத்தின் தீவிர ரசிகரான அவரது புகழ் பாடும் காட்சிகளிலும், மாரிமுத்துவிடம் பேசும் காட்சிகளும் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளும் மற்றைய சிச்சுவேஷனுக்கேற்ற நடிப்பும்தான் ஐயாவுக்கு இன்னமும் கைகூடவில்லை. கிடைத்தால் வரம்தான். அடுத்தடுத்த படங்களில் அவருக்கேற்ற கேரக்டர்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்துஜாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால் 'மேயாத மான்' முந்திக் கொண்டது என்கிறார்கள். முகத்திலேயே கவர்ந்திழுக்கிறார். காதலை தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் துவங்கி, கடைசியாக மூளை வளர்ச்சி குன்றியவராக அப்பாவி நடிப்பையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார். குறையில்லை.

இன்னொரு ஹீரோயின் சாந்தினி. முறை மாமன் என்ற முறையோடு பேசுவதும், கொஞ்சுவதுமாய் பாடல் காட்சிகளுக்கு சீன் போட்டிருக்கிறார். கடைசியாக மாமன் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக செளந்தர்ராஜனுக்கு கழுத்தை நீட்டிவிட்டு போகிறார். அந்தக் காட்சியில் அவர் பேசும் நிதானமான பேச்சு.. எல்லாவற்றுக்கும் சுபம் போடுகிறது. இந்த இடத்தில் இயக்கம் நன்று..!

படத்தின் முற்பாதியில் படத்தைத் தாங்கியிருப்பவர் தம்பி ராமையாதான். மனிதரின் டயலாக் டெலிவரியின் ஸ்பீடுக்கு ஏற்றாற்போல் நடிப்பையும் கொட்டியிருக்கிறார். 'சித்தாள்களை எப்படியெல்லாம் கொத்தனார்கள் வளைக்கிறார்கள்' என்பதை தனது நடிப்பிலேயே சொல்லிக் காட்டுகிறார் தம்பி ராமையா.

பெண் பார்க்க வரும் படத்தின் இயக்குநரான ராஜ் சேதுபதி ஒரு கேரக்டர் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார். சோகத்திற்கு சங்கிலி முருகனும் தன் பங்குக்கு தாத்தா கேரக்டரை செய்திருக்கிறார். இந்துஜாவின் அப்பாவாக கேமிராமேன் ரவீந்தர்.. சில காட்சிகளே என்றாலும் தன் பங்குக்கு பணக்காரத்தனமான ஆனால் அதே சமயம் கண்டிப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார்.

முறைப்போடு திரியும் தாய் மாமனாக மாரிமுத்து.. சொல்லிச் சொல்லிப் பார்த்து ஓய்ந்து போய் குடியில் வீழ்ந்து ரோட்டோராமாய் கிடந்து பரிதாபமாய் பேசும் அந்த இரண்டு காட்சிகளிலும் மனதை லேசாக டச்சிங் செய்திருக்கிறார் மாரிமுத்து.

ஒளிப்பதிவும், இசையும். ஒன்று சேர சொல்லியடித்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பாடல் வரிகளைக்கூட எளிதாக கேட்க முடிந்திருக்கிறது. டூயட் பாடல்களை மட்டும் கேஸட்டில் கேட்டுக் கொள்ளலாம் போல தோன்றுகிறது. பாடல் காட்சிகளை ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள். இதனால்தான் சுரேஷ் தப்பித்திருக்கிறார்.

இயக்குதலில் ஒரு குறையுமில்லை. அழகான இறுக்கமான இயக்கம்தான். தப்பே சொல்ல முடியாத அளவுக்கு நடிகர்களை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ் சேதுபதி. ஊர் கூட்டத்தை படமாக்கியிருக்கும்விதமே பாராட்டுக்குரியது.

படத்தின் பிற்பாதியில் திரைக்கதையில் சறுக்கலே இல்லாமல் தொடர்ச்சியான கதையாக கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். வாட்டர் டேங்க் மேல் ஊரின் மைனர் தனது தொடுப்புடன் உல்லாசமாக இருப்பது தெரிய வரும்போது குபீர் சிரிப்புதான் வருகிறது. அந்தக் கோபத்தில் அந்தத் தொடுப்பு செய்யும் செயலும். இது இந்துஜாவை எப்படி காயப்படுத்துகிறது என்பதும் தொடர்ச்சியான லாஜிக்கான காட்சிகள்.

இறுதியில் இந்துஜாவுக்கு தலையில் அடிபட்டு சரியாவதும், அதன் பின் இன்றைய இரவு மட்டும் தான் நடிப்பதாக அவர் சொல்ல.. இதுக்கு செத்தே போவலாம் என்று நினைத்து சுரேஷ் விஷம் கலந்த சாப்பாட்டைக் கொடுக்க.. இது பழைய கதைகளின் நீட்சிதான் என்றாலும் இயக்கத்தில் அழகு காட்டியிருப்பதால் பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. இறுதியில் யார் இவர்களைக் காப்பாற்றியது என்பது தெரிய வரும்போது இன்னொரு பெரிய டிவிஸ்ட்டை கொடுக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..!

ஆனால், இந்தப் படத்திற்கு அஜீத் ரசிகர்கள் என்னும் விஷயமே தேவையில்லாதது. அது இல்லாமலேயே படத்தின் கதையை நகர்த்தியிருக்கலாம். நன்றாகத்தான் இருந்திருக்கும். அஜீத்.. அஜீத்.. என்று 5 நிமிடங்களுக்கு ஒரு முறை காட்சியை நகர்த்திக் கொண்டே இருப்பதால் இடைவேளைக்கு பின்பு எரிச்சல்தான் வருகிறது. "அஜீத் ரசிகர்களுக்கான படம் இது.." என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் சொன்னால் நாம் எஸ்கேப்.. அவ்வளவுதான்..! 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.