நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவேண்டாம்

அரசியல்வாதிகள் நாட்டினது உயர்பீடமான நாடாளுமன்றத்தில் நடந்துக்கொள்ளும்
கேவலமான விதம் தொடர்பில் மலையக இந்து குருமார் ஒன்றியம் தமது கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
ஹற்றனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சிவ ஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் ஒன்றியம் சார்பாகக் குறித்த கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனச்சாட்சி மிக்கவர்களாக செயற்பட வேண்டும்.
இந்நாட்டில் நடைகின்ற விடயங்களை அவ்வப்போது, ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் கேவலமான நிகழ்வுகள் நடந்தேறுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அத்துடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்புகளின் போது அவர்களின் நிலைபாட்டில் நாட்டின் எதிர்காலத்தையும், தமது மக்களின் எதிர்காலத்தையும், தீர்மானிக்கும் வகையில் தீர்க்கமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ள இந்த நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளிவிடாது, நாடாளுமன்றத்தில் அராஜகம் செய்யாமல் நாட்டின் எதிர்காலத்திற்கு தெளிவான ஒரு சூழ்நிலையை நகர்த்தி செல்லவும் வலியுறுத்துகின்றோம்.
மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து பிரதான பஸ் தரிப்பிடம் வரை அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
இதில் மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இந்து ஆலயங்களின் குருமார்கள் கட்டாயமாக கலந்து கொண்டு இப் பேரணியை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.