புயல் வந்தால்தான் குடிநீர் பிரச்சனை தீருமாம்!

கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் கஜா புயல் போல இன்னும் 4 புயல்கள் வந்தால்தான் குடிநீர் பிரச்சினை தீரும் என்று கூறி உள்ளார்.


அமைச்சரின் பதில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. புயலினால் உணவு தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் பல மாவட்ட மக்கள் தவித்து வரும் நிலையில் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திண்டுக்கல் மாநகராட்சி பூங்காவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, புயல் பாதிப்புகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்றும், போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

கஜா புயலுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல்தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்றும், மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

காற்றாற்று வெள்ளம் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததன் காரணமாக, துண்டிக்கப்பட்ட வத்தலக் குண்டு மற்றும் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்கு வரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று கூறியவர், இதுபோல் மேலும் 4 புயல் ஏற்பட்டால்தான் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை தீரும் என்றவர் இறுதியாக புயல் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வர வேண்டும் என்று கூறினார்.

No comments

Powered by Blogger.