எனது கடைசி படம் ‘96’: சின்மயி

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாகப் பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றி வருபவர் சின்மயி. சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த ‘96’ படத்தில் த்ரிஷாவுக்குப்
பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காகச் சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து, “நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது. நான் எனது சந்தாவைச் செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்து செய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.
நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும், இந்த இரண்டு வருடங்களில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. தமிழில் ‘96’ தான் எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. பை! பை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளை மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியில் அம்பலப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக மீ டூ மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் அளித்தவர் சின்மயி. இந்த விவகாரத்தில் மீ டூக்கு எதிராக கருத்துக் கூறியவர் நடிகர் ராதா ரவி. தற்போது இவர்தான் டப்பிங் யூனியன் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.