பெண் அதிகாரியைத் தாக்கிய அதிமுக ஒ.செ

நாகை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய அதிமுக ஒன்றியச் செயலாளரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இதனையடுத்து அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரக் கடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி மற்றும் உதவியாளர் ஜெயபாலன் ஆகியோர் நேற்று முன்தினம் தங்களது அலுவலகத்தில் நிவாரணப் பணிகள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவா, செல்வியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த செல்வி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்வி தாக்கப்பட்ட தகவலறிந்த சக கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (நவம்பர் 18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக வட்டாட்சியருக்கு நேற்று அவர்கள் அனுப்பியுள்ள புகார் மனுவில், “பணியில் ஈடுபட்டிருந்த பெண் விஏஓ செல்வி மீது, கீழ்வேளூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் நடத்திய கொலைவெறித் தாக்குதலையும், பலாத்கார முயற்சியையும் கண்டுகொள்ளாத வட்டாட்சியரைக் கண்டித்து 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். குற்றவாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் பணி புறக்கணிப்பு செய்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சம்பவம் குறித்த விவரமறிய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கீழ்வேளூர் வட்டச் செயலாளர் பிரபாகரனை தொடர்புகொண்டோம்,
“கடந்த 16ஆம் தேதி கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளில் அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வுகூட இல்லாமல் ஈடுபட்டு வந்தோம். அகரக் கடம்பனூர் கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார் விஏஓ செல்வி. அன்று மாலை 4.40 மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவா, நான் முகாமைப் பார்வையிட வந்துள்ளேன் என்னை ரிசீவ் செய்யவில்லையா என்று கேட்டு கிராம நிர்வாக உதவியாளர் ஜெயபாலை அடித்துள்ளார். உடனே விஏஓ செல்வி, ‘எனது அலுவலகத்தில் புகுந்து அரசு ஊழியர் என்றும் பார்க்காமல் அவரை அடிக்கிறீங்களே’ என்று கேட்டு சிவாவை இடைமறித்தபோது, அவர் செல்வியையும் அசிங்கமாகப் பேசி, கடுமையாகத் தாக்கியுள்ளார்” என்று அவர் நம்மிடம் விவரித்தார்.
அதன்பிறகு நடந்தவற்றையும் குறிப்பிட்ட பிரபாகரன், “தாக்கப்பட்ட உடனே செல்வி சாலை மறியலில் தனியாக உட்கார்ந்தார். அவருக்கு ஆதரவாக ஊர் மக்களும் சாலையில் அமர்ந்தனர். தகவலறிந்த கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து செல்வியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதிகொடுத்தார். இதனையடுத்து 7.30 மணிக்குச் சாலை மறியலைக் கைவிட்டார் செல்வி. எங்கள் சங்கத்தினருக்கு தகவல் தெரிந்தவுடன் வட்டாட்சியர் தையல்நாயகியிடம் புகார் கொடுத்துவிட்டு செல்வியை திருவாரூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்” என்றார்.
மேலும், செல்வி தாக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்தும் ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை இல்லை. அதனால்தான் இன்று விஏஓக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வட்டாட்சியரிடம் நியாயத்தைக் கேட்க வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றுகூடியுள்ளோம் என்றும் தெரிவித்தார் பிரபாகரன்.
விஏஓக்கள் வேலைநிறுத்தம் பற்றி சப்-கலெக்டர் கமல்கிஷோரைத் தொடர்புகொண்டு கேட்டோம், “தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சினை நடந்த இடத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்று நம்மிடம் பதிலளித்தார்.
கஜா புயல் நிவாரணப் பணியின் போது விஏஓக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிவாரணப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்படும் என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
எம்.பி.காசி

No comments

Powered by Blogger.