அமைச்சரின் கார் மீது தாக்குதல்!

நிவாரணப் பொருட்கள் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அமைச்சர் ஓ.எஸ். மணியனின் காரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனாலும் நிவாரணப் பணிகள் சரிவர சென்றுசேராத காரணத்தால், பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.முன்னதாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் பெண் விஏஓ தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்க சப்-கலெக்டர் கமல்கிஷோரை தொடர்புகொண்டபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்த இடத்தில் இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி விசாரித்தோம்.

நாகை மாவட்டத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறை செய்த வேலைகளைப் போல மாவட்ட வருவாய்த் துறை முன்னெச்சரிக்கையாகச் செயல்படாத கோளாறுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள். பல இடங்களில் வருவாய்த் துறையினர் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் காவல் துறையினர்தான் செய்திருக்கிறார்கள்.

“குடிநீர், இருப்பிடம், உண்ண உணவு இல்லாமல் அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான தேவைகள் என்ன என்பதைக் கேட்டு வழங்கத் தவறிவிட்டது மாவட்ட நிர்வாகம்” என்று குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.அமைச்சர் கார் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் வேட்டைக்காரனிருப்பு அருகே புதுப்பள்ளி, கிழக்கு புதுப்பள்ளி, மேற்கு புதுப்பள்ளி, தெற்கு கல்லிக்குலம், வடக்கு கல்லிக்குலம் ஆகிய பகுதியில் 6ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் இல்லை என்று அவர்கள் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாகனம், அவரது பாதுகாப்பு வாகனம் மற்றும் கட்சியினரின் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி வந்தன. ஏற்கனவே கடுமையான கோபத்திலிருந்து மக்கள், இதனைப் பார்த்தவுடன் அமைச்சரின் காரைத் தாக்கத் தொடங்கினர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினரும், அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும், அமைச்சரை காரிலிருந்து இறக்கி பாதுகாப்பாக பக்கத்து வீதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மாற்று காரில் அனுப்பிவைத்தனர். இதுபோலவே பல இடங்களில் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை காவல் துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

களத்திலிருக்கும் முக்கியமான அதிகாரியைச் சந்தித்து மாவட்டத்தின் நிலவரத்தைப் பற்றிக் கேட்டோம், “மாவட்டம் போராட்டக்களமாக மாறியுள்ளது. எங்குப் பார்த்தாலும் மறியல், ஆர்ப்பாட்டம், அரசு அலுவலகம் முற்றுகை, அதிகாரிகள் கார் முற்றுகை, என இருக்கிறது. அதிகாரிகள் ஊருக்கு உள்ளே சென்றாலும் திரும்ப அனுப்புகிறார்கள். இதில் மேலதிகாரிகளின் டார்ச்சர் ஒருபக்கம்” என்று வேதனையடைந்தார்.

தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கூடுதலாக நியமித்து டெல்டா பகுதிக்கு உடனடியாக புறப்படச்சொன்னார் . அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் டெல்டா மாவட்டத்தை நோக்கி அவசரமாகப் புறப்பட்டனர். மக்களுக்குத் தேவையானதை காலதாமதம் இல்லாமல் செய்யுங்கள் என்று அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் முதல்வர். 

No comments

Powered by Blogger.