அதிக விலையில் டிக்கெட்: ரஜினி எச்சரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் டிக்கெட் விலையிலிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்திய அளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும், வெளிநாடுகளிலும் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 2.0 படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட், 2000,3000 என்று விற்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் இன்று (நவம்பர் 18) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம் அன்புத்தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாகக் கீழ்க்காணும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

1) திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக் கூடாது.

2) ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.

3) இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, அவர்களின் படங்களின் டிக்கெட் விலை, தியேட்டர் கட்டணத்தை விட அதிகமாக விற்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழும். சமீபத்தில் வெளியான சர்கார் படமும் இதில் சிக்கியது. ரஜினிகாந்த நடிப்பைத் தாண்டி அரசியல் கருத்துகள் கூறத் தொடங்கியதிலிருந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் இவ்வேலையில், டிக்கெட் விற்பனையிலும் இது போன்றதொரு அவப்பெயர் எடுக்க வேண்டாம் என்பதில் கவனம் செலுத்துவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.