சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது

சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதுடன் ; பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.


இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியும் அவர்கள் வெளியேறாத காரத்தினால் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதல் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகேயும் வேறு பல இடங்களிலும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Powered by Blogger.