வடக்கு தமிழ் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்: குரே

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் வடமாகாண தமிழ் இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


வடமாராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”யாழ். குடா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் முந்தைய காலங்களில் எவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வி பயின்றார்கள் என்பதை நான் அறிவேன்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் முன்னேற்றகரமாக காணப்பட்ட கல்வி நிலை அண்மைக் காலமாக சற்று பின்னோக்கி சென்று தற்போது மீண்டும் முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டிலும் நமது வடக்கு மாணவர்கள் தற்போது சிறப்பாக செயற்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும். சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

ஆசியாவில் விளையாடி இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த செல்வி தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் கவலை அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.