ஜெயமோகன் சிக்கிய அடுத்த சர்ச்சை!

சர்கார் படத்தின் கதை குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்த நிலையில் மற்றொரு சர்ச்சையை அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் கிளப்பியுள்ளார்.


அக்டோபர் 29ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயமோகன் சர்கார் படத்தின் கதைத் திருட்டு குறித்து விளக்கம் கொடுத்தார். அனைவரும் அறிந்த செய்தியிலிருந்து படத்திற்கான ஒன்லைனை இருவரும் எடுத்தததாலேயே இது சர்ச்சையாகியுள்ளது என்று ஜெயமோகன் தெரிவித்தார். அதன் பின் தானும் இயக்குநர் குழுவும் இணைந்து பல காட்சிகளை அமைத்து உருவாக்கியதாக கூறினார். ஒரே மாதிரியான கருவுள்ள படைப்புகள் பற்றி விளக்கம் கொடுப்பதற்காக ஜெயமோகன் கூறிய உதாரணம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பூமியிலே ராஜாக்கன்மார்னு ஒரு படம் மலையாளத்தில் வந்தது. அந்தப் படத்தில் இருந்து, இன்ஸ்பயர் ஆகி, அதாவது அதே கருவை வைத்து, லீடர்னு ஒரு படம் தெலுங்குல வருது. அந்த லீடர் படத்துடைய கருவை கொஞ்சம் மாத்தி தமிழ்ல ஒருத்தரு வெட்டாட்டம்னு ஒரு நாவல் எழுதறாரு. வெட்டாட்டம் நாவலோட ரைட்டை வாங்கி நோட்டான்னு ஒரு படம் எடுக்கறாங்க. அப்ப நோட்டா படத்தைப் பாத்து இன்னொருத்தன் படம் எடுப்பான்...” என்று பேசியிருந்தார்.

ஜெயமோகன் இப்படிக் கூறியதற்கு வெட்டாட்டம் நாவலை எழுதிய எழுத்தாளர் ஷான் கருப்பசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். “போகிற போக்கில் எந்தக் கூச்சமுமின்றி குற்றம் சாட்டும்போது, தனது இருக்கைக்கு அடியில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பிலிருந்து தப்பிக்க எதையாவது பற்றிக்கொள்ளும் பதற்றமும் அவசரமும்தான் தெரிகிறது. பேச வேண்டிய பிரச்சினையை திசைதிருப்பும் கள்ளத்தனம்கூட இருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது” என்று ஷான் தனது முகநூலில் கூறியுள்ளார்.

“நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணியில் இருக்கிறேன். அது தொடர்பாக உலகெங்கும் பயணிக்கிறேன். கருத்தரங்குகளில் பேசுகிறேன். கவிதை, கட்டுரை நூல்களை எழுதியிருக்கிறேன். வெட்டாட்டம் எனது முதல் நாவல். அதைத் தழுவி எடுக்கப்பட்ட நோட்டா என்ற படத்தின் திரைக்கதையிலும் பணியாற்றி இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் எனக்கென்று ஒரு இடத்தை நான் இத்தனை ஆண்டுகால உழைப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். பல பத்திரிகையாளர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் நான் ஒரு திரைப்படத்தின் கருவை மாற்றி நாவலாக எழுதினேன் என்று பக்கத்திலிருந்து பார்த்தவர் போல ஜெயமோகன் குற்றம் சாட்டியிருப்பதை எனது பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிக்கும் செயலாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“அவர் குறிப்பிட்ட மலையாளப் படத்தையோ தெலுங்குப் படத்தையோ இதுவரை நான் பார்க்கவில்லை. நோட்டா குறித்து அறிவிப்பு வந்தபோது நண்பர்கள் சிலர் லீடர் படம் குறித்து சொன்னதுண்டு. ஜெயமோகனுக்கு பதிலளிக்கும் முன்பாக அதைப் பார்த்துவிடுங்கள் என்று சிலர் சொன்னார்கள். அப்படிப் பார்த்து வெட்டாட்டமும் இந்தக் கதைகளும் வேறு வேறானவை என்பதற்கான ஆயிரம் காரணங்களை என்னால் அடுக்க முடியும். ஆனால் எனக்கு உபயோகமான வேறு வேலைகள் இருக்கின்றன. ‘பூமியிலே ராஜாக்கன்மார்’ படக் குழுவினரோ ‘லீடர்’ படக் குழுவினரோ இப்படி ஒரு குற்றம் சாட்டி அது நிரூபிக்கப்படாத ஒரு நேரத்தில் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டிய ஜெயமோகனுக்குத்தான் அதை நிரூபிக்கும் பொறுப்பு இருக்கிறது.”

“அவர் பணியாற்றிய சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதாக ஒரு வழக்கு நடக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பல லட்சம் மக்களைச் சென்று சேரும் தளத்தில் லாவகமாக இந்தக் குற்றச்சாட்டை அவர் நுழைக்கிறார். இதன் மூலமாக அந்தப் பேட்டியைப் பார்க்கும் அனைவர் மத்தியிலும் எனது பெயருக்கு நிரந்தரமாகக் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். இதை அவர் அறியாமல் தவறுதலாகச் செய்ததாக நான் கருதவில்லை. ஏனென்றால் அவர் ஒரு பேச்சாளர். எதை எந்த இடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று தயாரித்துக் கொண்டு வந்துதான் பேசியிருப்பார். எனது இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று அவர் கருதினால் தனது சொற்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். அப்படி அவர் தெரிவிக்காத சூழலில் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று ஷான் கருப்பசாமி தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.