மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம்!

தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை சந்திக்கத் தயார்” என்று அறிவித்துள்ளார்.


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் மதுரையில் தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டுக்குச் செல்வது குறித்து தினகரன் தரப்பினர் குழப்ப மனநிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. தங்களின் இறுதி முடிவை அக்டோபர் 31ஆம் தேதி அறிவிப்பதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் இன்று (அக்டோபர் 31) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “நாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். தேர்தலில் டெபாசிட் பெறுவதற்காக அதிமுக போராட வேண்டியதிருக்கும். நாங்கள் 20 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறுவோம்” என்று அறிவித்தார்.

மண்குதிரை என்று உங்களை ஜெயக்குமார் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “20 தொகுதி இடைத் தேர்தலின்போது மண்குதிரை யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அமைச்சராய் இருப்பதைத் தவிர அவருக்கு வேறோன்றும் தகுதியில்லை” என்று பதிலளித்தார்.

மேலும், “20 தொகுதிகளில் 2 தொகுதிக்கு ஜனவரி மாதத்தோடு அவகாசம் முடிவடைகிறது. அந்த சமயத்தில் இரு தொகுதிகளுக்கு மட்டும் புயலோ அல்லது சுனாமியோ அடிக்கலாம். அதனால் தேர்தல் ஆணையம், தலைமை செயலாளர், அரசாங்கம் போன்றவை என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை. 20 தொகுதி இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக செயல்வீரர் கூட்டத்தை நடத்தி பொறுப்பாளர்கள் நியமித்தனர். ஆனால் தலைமை செயலாளரை விட்டு கடிதம் எழுதச் சொல்லி தேர்தலை தள்ளி வைத்தனர்” என்று குறிப்பிட்ட தினகரன்,

தற்போது அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் ஆர்.கே.நகரில் பணியாற்றியவர்கள், அங்கு மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அவர்கள்தான் தற்போது 20 தொகுதிகளுக்கும் சென்றுள்ளனர். ஆர்.கே.நகர் தீர்ப்புதான் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த முறை டெபாசிட்கூடக் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.