மீண்டும் நெகிழ்ந்த கார்த்தி!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படத்தில் தான் நடிப்பது குறித்துப் புளகாங்கிதம் அடைந்திருந்த நடிகர் கார்த்தியைத் தற்போது மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் தள்ளியுள்ளார் ஒருவர்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக இணைந்த கூட்டணியான கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஜோடி தற்போது தேவ் எனும் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவே எடிட்டர் ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் வாயிலாக கார்த்தியின் ஒரு படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடலான 'ஒரு நூறுமுறை' எனும் பாடல் குறித்து ட்விட்டரில் சமீபத்தில் பதிவிட்டிருந்த கார்த்தி, “ இந்த அழகான பாடலுக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி நன்றி கூறுவது? இந்தப் பாடலைப் படமாக்கும்போது ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தால் பாடல் பாடப்பட்டுள்ளதால் ரொம்பவே நெகிழ்ந்து போயுள்ளார் கார்த்தி. இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்தி, “ சின்ன வயதில் நேஷனல் பானாசோனிக் ரேடியோ செட்டில் அவரது பாடல்களைக் கேட்ட காலத்திலிருந்து தற்போதுவரைக்கும் அவரது குரலில் மயங்கியுள்ளேன். அவரது பாடலில் நான் நடித்து திரையில் வெளியாகும் என கனவில்கூடக் நினைத்ததேயில்லை” எனக் கூறியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் சூர்யாவுக்கு எண்ணற்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் வந்துள்ளன. சொல்லப்போனால் மற்ற எந்த நடிகரையும்விட சூர்யாவுக்கே அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் ஹாரிஸ். சூர்யா- ஹாரிஸ் காம்போ எனும் சொல்லாடல்கூட கோலிவுட்டில் ரொம்பப் பிரபலம். இப்படியான சூழலில் கார்த்தியும் தற்போது இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் பாடல்கள் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தப் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.