மடு தேவாலயப் படுகொலை தமிழ் மக்கள் உயிர் நீத்த நினைவு நாள்


 மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித தலம். இந்துக்களாலும் பௌத்தர்களாலும் மிகவும் நம்பிக்கையுடன் வணங்கப்படுகின்றன இந்த தலம் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளுக்கும் இன அழிப்புச் செயல்களுக்கும் முகம் கொடுத்தது என்ற வகையில் இன அழிப்பின் வரலாற்றுச் சாட்சியமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


தமிழ் மக்கள் போர்க் காலங்களில் அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்து தம் உயிரை காக்கின்ற நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் ஶ்ரீலங்கா அரசின் யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து மடுப் பிரதேசம் வரையில் எறியப்பட்டனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மன்னார் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1996இற்குப் பிந்தைய இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு மடு தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.

மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கினர் ஶ்ரீலங்கா அரச படைகள். இதற்கு அன்றைய மன்னார் ஆயர் எதிர்ப்பு தெரிவித்தார். புனித தலமான மடு தேவாலயம்மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர்.

அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய ஜனாதிபதி மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தினார்.
பல்லின மக்களையும் காப்பாற்றும் மடுமாதா, சிங்களவர்களும் திருவிழாக் காலங்களில் நிறை நிறையாக வந்து தங்கி வணங்கிச் செல்லும் நம்பிக்கை மாதா, தம்மை காப்பாற்றுவாள் என நினைத்தபடி தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். நவம்பர் 20ஆம் திகதி. 1999ஆம் ஆண்டு. மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் ஶ்ரீலங்காப் அரச படைகள். பாலம்பிட்டி – சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது ஶ்ரீலங்கா இராணுவம்.

இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஶ்ரீலங்கா அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர். மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர். மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும். 20க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள்.
துப்பாக்கிப் பிரயோகங்கள். இன்னொரு புறம் எறிகணைகள். மடு ஆலய வளாகத்தில் வசித்த மக்கள் அனைவரையும் ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு கூறினர் இராணுவத்தினர்.

இரவு 9மணியின் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவ தளத்திலிருந்து செல்கள் மடுதேவாலயம் நோக்கி வரத் தொடங்கின. இரவு பதினொரு மணி இருண்டு போன அந்த நாளில் பீரங்கிகள் மக்களின் பக்கம் திரும்பின. சனங்கள் என்ன செய்வதென தெரியாது வானத்தை நோக்கி மடுமாதாவே எங்களைப் காப்பாற்றும் என இறைஞ்சியபடி இருந்தனர்
இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ் இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர். 13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது

No comments

Powered by Blogger.