மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பம்!

https://www.tamilarul.net/ தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ லட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மண்ணில் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன.

கடந்த வருடம் தாயக தேசத்தில் பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டன.
தற்போது நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குழப்பங்களுக்கு மத்தியிலும், மாவீரர் நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு, தமிழர் தேசம் எழுச்சியுடன் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர், மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன. மாவீரர் வாரத்தை நினைவுகூர முடியாதளவுக்கு நெருக்கடிகளும், கெடுபிடிகளும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு, பகிரங்கமாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டது. தமிழீழ தேசத்தில் முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்களில், மாவீரர் பெற்றோர்களின் கண்ணீர்க் கதறலுடன் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டும் மாவீரர் நாள் நினைவேந்தல் தாயக தேசத்தில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிப்பதற்கு தயாராகிவிட்டன. கடந்த சில வாரங்களாகவே சுத்தம் செய்யும் பணிகள் மக்களால் மும்மூராக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தை 1989ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும்.
நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படும்.
மறுநாள் நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினம் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை முடிவடையும் தருணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டு, மாவீரர்களுக்கான நினைவுப்பாடலுடன் ஈகச்சுடரேற்றல் நடைபெறும்.

No comments

Powered by Blogger.