மாடு வெட்டத் தடை!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபையால் நிறைவேற்றப்பட்ட ‘‘மாடு வெட்டத் தடை’’ தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்து தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக்கோரி உறுப்பினர் மதுசுதன் கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற மாதாந்த அமர்வில் தீர்மான வரைவு ஒன்றைக் கொண்டு வந்தார். குறித்த தீர்மானம் விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் அந்தத் தீர்மானத்தைப் மீள்பரிசீலனை செய்து மாட்டிறைச்சிக்கு உள்ள தடையை நீக்குமாறு கோரி 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு சபைக்கு கையளித்துள்ளனர்.
அவர்கள் கையளித்துள்ள மனுவில், நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சி உண்பவர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாது நோயாளர்களான எம்மில் பலருக்கு மருத்துவர்கள் மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
இதன் காரணமாக நாம் எமது பிரதேசத்தை விட்டு வெளியிடங்களுக்குச் சென்று மாட்டிறைச்சியை வாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் எமக்கு நீண்ட அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகின்றது.
இது போன்ற அடிப்படைக் காரணிகள் பலவற்றை கவனத்தில் கொண்டு சபையால் விதிக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சித் தடையை நீக்கி எமது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்து தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சபையின் தவிசாளர் தியாகமூர்த்தியை கேட்டபோது, ‘‘இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரின் பதில் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.