ஆஸ்திரேலியத் தொடரில் காம்பீர்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டித் தொடரில் கெளதம் காம்பீரும் இணையவுள்ளார்.


தலைப்பைப் பார்த்ததும் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்துவிட்டார் எனக் கருத வேண்டாம். இரு அணிகளுக்கு இடையேயான தொடரில் ஒரு வர்ணனையாளராகத்தான் களமிறங்கவுள்ளார் காம்பீர். கடந்த ஐபிஎல்லில் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து சொதப்ப அந்தத் தொடரின் பாதியிலேயே வெளியேறிய கம்பீர் இந்த ஆண்டு அந்த அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்தான் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை ஒளிபரப்பவுள்ள சோனி நிறுவனத்துடன் இணைந்து வர்ணனை செய்யக் களமிறங்கியிருக்கிறார் காம்பீர். இவருடன் சுனில் கவாஸ்கர், மைக்கேல் க்ளார்க், நிக் நைட், மொஹமது கைஃப், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆஷிஷ் நெஹ்ரா, ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங், மார்க் பச்சர், டாமினிக் கார்க், ஹர்ஷா போக்ளே, கெளரவ் கபூர், முரளி கார்த்திக், விவேக் ரஸ்தன் மற்றும் தீப்தாஸ் குப்தா உள்ளிட்டோரும் வர்ணனை செய்யவுள்ளனர்.

58 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 4154 ரன்கள், 147 ஒருநாள் போட்டிகள் விளையாடி 5238 ரன்கள், 37 டி 20 போட்டிகளில் 932 ரன்கள், 154 ஐபிஎல் போட்டிகளில் 4218 ரன்கள் எனக் குவித்துள்ள காம்பீர் வெற்றிகரமான துவக்க வீரராகவே பலராலும் அறியப்படுகிறார். வீரராகவும் கேப்டனாகவும் பல சூழல்களில் போட்டிகளை எதிர்கொண்ட அனுபவம் மிக்க காம்பீர் ஆட்டத்தின் வர்ணனையில் நுட்பத்துடன் செயல்படுவார் என்று நம்பலாம்.

காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸிலிருந்து நீக்கப்பட்டாலும் டெல்லி ரஞ்சி அணியில் தொடர்ந்து இருந்துதான் வருகிறார். எனவே இந்தியா - ஆஸ்திரேலியா முழுத் தொடரிலும் காம்பீர் வர்ணனையாளராகத் தொடர்வாரா அல்லது சில போட்டிகளில் மட்டுமே ஈடுபடுவாரா என இனிமேல்தான் தெரியவரும்.

No comments

Powered by Blogger.