முதல்வரின் டெல்லி பயணம்: தினகரன் சந்தேகம்!

“அவசர அவசரமாக முதல்வர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா” என்று தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.


கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கியுள்ள நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள், பல இடங்களில் நிவாரண முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளுக்கு சென்றுவிட்டு, மழையின் காரணமாக திருவாரூர், நாகை செல்லாமல் பாதியிலேயே திரும்பினார். இன்று மாலை டெல்லி செல்லும் முதல்வர், நாளை பிரதமரை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதி குறித்து வலியுறுத்தவுள்ளார்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களின் குறைகளைக் கேட்டுவரும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், மூன்றாவது நாளாக இன்றும் மக்களை சந்திக்கிறார்..

இந்த நிலையில் தினகரன் இன்று (நவம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐந்து நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் பறந்து வந்த முதல்வர், வானிலையைக் காரணம் காட்டி திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே திரும்பியுள்ளார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் காவல் துறை பாதுகாப்புடன் சில பயனாளிகளுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு பறந்துவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“தற்போது, முதல்வர் பிரதமரை நாளை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன” என்று தெரிவித்துள்ள தினகரன், நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும் உடைமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதல்வர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாகவும் தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.