மியூசிக்கலி உலகமே திரும்பிப்பார்!

லட்சக்கணக்கான வீடியோக்களை தினமும் செரித்துக்கொண்டிருக்கிறது மியூசிக்கலி உலகம். ‘டிக் டொக்’ என பெயரை மாற்றிக்கொண்டாலும், இசையில்லா வீடியோக்கள் இருக்கின்றன என்றாலும் மியூசிக்கலி என்ற பெயரை விட்டுவிட விரும்பாமல் அந்நிறுவனமே
வைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், ஒலி இல்லாதபோதும் ஏதோ ஒரு ஒலியுடன் அதிலிருக்கும் வீடியோக்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அதன் வீடியோக்கள் உருவாக்கப்படுவது தான்.

சமீபகாலமாக டிக் டொக் கலாச்சாரத்தில் பரவிவரும் டிரெண்ட் என்னவென்றால், “இதுதான் என் நிறம், தோற்றம், குரல்; இது பிடிக்கவில்லையா உங்களுக்கு?” என்ற டிக் டொக் பயனாளர்களின் வீடியோக்கள் தான். ‘தாழ்வு மனப்பான்மை’ என ஒற்றைக் காரணத்தைச் சொல்லி அவற்றைக் கடந்துவிடுபவர்களுக்கு; லைக், ரியாக்‌ஷன் கிடைப்பதைத் தாண்டி டிக் டொக் மூலம் எவ்வித லாபமும் இல்லை என்பதை சீக்கிரமே உணர்ந்துவிட்டவர்கள் அவர்கள் என்ற பதம் நினைவுக்கு வருவதில்லை.

‘உண்மையில் டிக் டொக் வீடியோக்களில் திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் லாபம் இல்லையா?’ என்ற கேள்விக்கு, சமீபத்தில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படமான ‘லட்டு’ படத்தின் ஹீரோயினைக் காட்டவேண்டும்.

திரிச்சூரைச் சேர்ந்த சயனா சுனில் ஒரு ஃபேஷன் டிசைனர். ‘புதிய படம் ஒன்றில் இடம்பெற உங்களது நடிப்புத் திறமையை வீடியோ மூலம் பதிவு செய்து அனுப்புங்கள்’ எனக் கேட்டிருந்தனர் லட்டு படக்குழுவினர். அதற்காக, அதிக ஈடுபாடின்றி மிகவும் சாதாரணமாக சயனா எடுத்து அனுப்பிய வீடியோ தான் இன்று அவருக்கு லட்டு திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும்புகழ் கிடைக்கக் காரணமாக அமைந்தது.

சயனாவின் இயல்பான நடிப்பைப் பார்த்த படக்குழுவினர், அவரை அழைத்துப் பல விதமான சோதனைகள் நடத்தி ஹீரோயினாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

படத்தில் சேர்ந்தபோது, தனது உடை மற்றும் பாவனைகளில் அதிகம் நாட்டமில்லாத சயனா, படத்துக்காக கற்றுக்கொண்ட பலவற்றை தனது அடையாளமாக்கிக்கொண்டு, தற்போது மலையாள திரையுலகின் புதிய கனவுக் கன்னியாக உலா வருகிறார்.

வீடியோ ஆடிஷன் மூலம் நடிகர்களைத் தேர்ந்தெடுத்த லட்டு படக்குழுவின் முயற்சி, மலையாள சினிமாவில் புதிது என்று கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் அந்தமாதிரி பல படங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் பங்கேற்க, டிக் டொக் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து ‘யார் வேண்டுமானாலும் ஹீரோயினாகலாம்’. ஆனால், அந்த முயற்சியைச் செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.