அதிகாரிகளைப் பாராட்டிய ஆளுநர்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர், “அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர்” என்று பாராட்டினார்.



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (நவம்பர் 21) காலை முதல் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். கஜாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த ஆளுநர், கிராமங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சேதமடைந்த வீடுகள், மரங்களை பார்வையிட்டார்.

நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அனுப்புவதற்காக மூன்று உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நாகை சார்-ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தை இன்று மாலை 4.30 மணியளவில் நேரில் பார்வையிட்ட ஆளுநர், உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அவரிடம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உணவு தயாரிக்கும் முறைகளை விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், “ மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளும் கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர்.பொறுப்பை உணர்ந்து செயலாற்றிவருகின்றனர்” என்று பாராட்டினார். மக்கள் உங்களிடம் எந்தெந்த கோரிக்கைகளை முன்வைத்தனர் என்ற கேள்விக்கு, “மக்கள் உணவும், நிவாரண நிதியும் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் 3அல்லது 4 நாட்களில் நிலைமைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று நான் அவர்களிடம் உறுதிகூறியுள்ளேன்” என்று பதிலளித்தார்.

வேதாரண்யம் பகுதியில் அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ தங்கள் கிராமத்திற்கு வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அமைச்சர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.