போராடித் தோற்ற இந்தியா!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.



இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையே இன்று முதல் டி- 20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆர்கி ஷார்ட் 7 ரன்னில் அவுட் ஆக, பின்னர் அதிரடியாக விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச்சும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் க்றிஸ் லின், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோய்ன்ஸ் போன்றோர் கணிசமாக ரன்களைச் சேர்க்க ஸ்கோர் உயர்ந்துகொண்டிருந்தது. இரு அணிகள் விளையாடியது போதாது என தன் பங்குக்கு மழையும் சிறிது நேரம் களத்தில் விளையாட, ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த கொஞ்ச நேர மழைதான் ஆட்டத்தின் போக்கையும் மாற்றியது.

மழையால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட மேக்ஸ்வெல் அடித்த 47 ரன்களின் உதவியுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி இருக்கும் ஃபார்முக்கு இந்த ரன்கள் ஒன்றும் பெரிய இலக்கு இல்லைதான். ஆனால் கணிசமாக வீழ்ந்த விக்கெட்டுகளால் துவக்கத்தில் தடுமாறியது இந்தியா.ரோஹித் 7 ரன்னில் ஆட்டமிழக்க ஷிகர் தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார்.

மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் கணிசமான ரன்களை சேர்ந்தனர். இதனால், கடைசி ஓவரின்போது, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற கடைசி 6 பந்தில் இந்தியாவுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி, அதில் 8 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.