சிவகங்கையில் செவிலியர்கள் போராட்டம்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் அதிகாரிகளைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்குள்ள செவிலியர்கள்.


சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் முதல்வராக வனிதா இருந்து வருகிறார். இங்கு 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் உயரதிகாரிகள் தங்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர் இம்மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள்.

கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட தங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளனர். இன்று (நவம்பர் 21), தங்களது பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தின் முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகளைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அவர்களது புகார்கள் ஏற்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர் செவிலியர்கள். 

No comments

Powered by Blogger.