#Me Too நடிகர் அலோக் நாத் மீது வழக்குப் பதிவு!

#Me Tooவிவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அலோக் நாத் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் சமீபத்தில் மீ டூ பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பல பிரபலங்களுக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன.

அந்த வகையில் பாலிவுட்டில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான அலோக் நாத் மீது இயக்குநர் விந்தா நத்தா பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் விந்தா, “19 வருடங்களுக்கு முன்னர் அலோக் நாத் விருந்து ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விந்தா அளித்த புகாரின் அடிப்படையில் அலோக் நாத் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை காவல் துறையின் மூத்த அதிகாரி மனோஜ் ஷர்மா, ‘வினிதா நந்தா அளித்த புகாரை அடுத்து, ஓஷிவாரா போலீஸ், அலோக்நாத் மீது பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

விந்தா நந்தா, அலோக்நாத் தன்னை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார் என்று முன்னர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதையடுத்து அலோக் நாத்தின் மனைவி, விந்தா நந்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும் அலோக் நாத், நந்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கிற்கான மனுவில் அலோக் நாத், ‘என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு விந்தா நந்தா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். மேலும் எனக்கு ஒரு ரூபாய் இழப்பீடாகவும் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.