திமுக நிதி : முதல்வரிடம் ஒப்படைப்பு!

கஜா புயல் நிவாரண நிதிக்காக திமுக அறிவித்த ரூ.1 கோடியை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 21) முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.


கஜா புயல் காரணமாகத் தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்பைத் தொடர்ந்து கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை திமுக அறிவித்தது.

”கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையிலிருந்து ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள்” என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில், ரூ.1 கோடிக்கான காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. அதுபோன்று விரைவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஊதியத்தையும் அளிக்கவுள்ளோம்

மீட்புப் பணிகளில் அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில், அரசியல் செய்யக்கூடாது, இந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதால் தான், முதல்வரின் வீட்டுக்குச் சென்று காசோலையை வழங்கினோம் என்றார். தேமுதிக ரூ. 1 கோடி! தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். முதல் கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று (20.11.2018) நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாம் கட்டமாக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து தேமுதிக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.