ஆளுநர் காரை மறிக்க முயன்ற மக்கள்!

திருவாரூரில் ஆய்வு செய்ய சென்ற ஆளுநரின் காரை மறித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2ஆவது நாளாக இன்று ஆய்வு செய்தார். திருவாரூரில் உள்ள மன்னார்குடி, தட்டாங்கோயில், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் காலை ஆய்வு செய்த அவர், அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
திருவாரூர் சன்னிதி தெருவில் அவர் ஆய்வு செய்தபோது அருட்ஜோதி என்ற பெண், தனது வீட்டை இழந்து பள்ளியில் தங்கியுள்ளதாகவும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க அவரிடம் கூறினார். அவரது கண்ணீரைத் துடைத்துவைத்த ஆளுநர் அனைத்து உதவிகளும் கிடைக்கும் என உறுதியளித்தார்.
கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குளம், சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று சேதமான குடிசைகளைப் பார்வையிட்டு ஆறுதல் வழங்கினார். பின்னர், காத்தான்குளம் கிராமத்தில் புயலால் சாய்ந்த மின் கோபுரங்களை சீரமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.
ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தை அடைந்தபோது, அவரது காரை மறிக்கப் பொதுமக்கள் முயற்சித்தனர். அதற்குள் அவரது வாகனம் அந்த இடத்தைக் கடந்து செல்லவே, பின்னால் வந்த அதிகாரிகளின் காரை மறித்துப் போராட்டம் நடத்தினர். புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதிகாரிகளின் பேச்சினால் சமாதானம் அடைந்த பின்னரே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆளுநர், அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் முத்துப்பேட்டைக்குத் தனியாகச் சென்ற நிலையில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்ட பின்னரே அதிகாரிகள் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.