டெல்டாவுக்கு மீண்டும் முதல்வர் விசிட்!

“இன்று காலையிலிருந்து தலைமைச் செயலகத்தில்தான் இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புயல் நிவாரண நிதி கொடுக்க வரும் பிரபலங்களை நேரில் சந்தித்து நிதியை வாங்கிக் கொண்டார். நிதி கொடுக்க வரும்
எல்லோரிடமும், ‘நீங்க அங்கே போயிருந்தீங்களா? நிலைமை எப்படி இருக்கு? அதிகாரிகள் வேலை செய்யுறாங்களா?’ என விசாரிக்கிறார் முதல்வர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனும் முதல்வரைப் பார்க்கப் போயிருந்தார்கள்.
விக்ரமராஜாவிடம், ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டுதான் இருக்கோம். சிலர்தான் அங்கே எந்த வேலையும் நடக்கைலைன்னு சொல்லி பெருசுபடுத்துறாங்க. உங்க சங்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் சொல்லி அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளை உடனே திறக்க சொல்லுங்க. லாபம் எதுவும் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்ய சொல்லுங்க. கையில் பணம் இல்லாமல் எதுவும் கேட்டு மக்கள் வந்தாலும், அவங்க கேட்பதை கொடுக்க சொல்லுங்க. கடைக்காரர்களுக்கு நாம ஹெல்ப் பண்ணிடலாம். அரசாங்கம் இதை சொன்னால், அரசியலாக்கிடுவாங்க. நீங்களே உங்க நிர்வாகிகள் மூலமாக இதை எல்லா ஊர்களுக்கும் பேசிடுங்க..’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.
அதற்கு விக்ரமராஜா, ‘நான் உடனே எங்க நிர்வாகிகளிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்யுறேன். கடைகளே தேவைப்படாத அளவுக்கு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என எல்லோரும் சேர்ந்து மக்களுக்கான உதவிகளை செஞ்சுட்டுதான் இருக்காங்க. இருந்தாலும், ஓரளவுக்கு திறக்கக்கூடிய நிலையில் இருக்கும் கடைகளை உடனே திறக்கச் சொல்லிடுறேன். மின்சார வசதி இல்லாததால், ஃப்ரிட்ஜ் ஓடாது. அதனால், பால் உள்ளிட்ட சில பொருட்களை வெச்சு பாதுகாக்க முடியாது. அதனால்தான் பெரிய கடைகளேகூட இன்னும் திறக்காமல் இருக்காங்க. இன்னும் சிலர் எங்க சங்கத்தோட கட்டுப்பாட்டில் வர மாட்டாங்க. அதனால் வெள்ளையன் அண்ணன்கிட்டயும் இதை சொல்லி, அவங்க சங்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் தகவல் சொல்ல சொல்லிடுறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனிடம், ‘நீங்களே வந்து உதவி செய்யுறதுக்கு நன்றி. உங்க விளம்பரத்தையெல்லாம் நான் பார்க்கிறேன். நல்லா பண்றீங்க..’ என்று சொன்னாராம் முதல்வர்.
அதேபோல காலையில் முதல்வர் தலைமைச் செயலகம் கிளம்புவதற்கு முன்பே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வைத்து எடப்பாடி பழனிசாமியை பார்த்திருக்கிறார். பாதிக்கப்பட்ட இடங்களில் தான் பார்த்தவற்றையெல்லாம் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் திருமா. ‘எப்படியும் அங்கே மறுபடியும் மின்சாரம் கொடுக்க மாசக் கணக்கில் ஆகும் என்பது எனக்கும் தெரியும். தகவல் தொடர்புக்கு அவங்களுக்கு போன் அவசியம். அந்தப் போனுக்கு சார்ஜ் பண்ணியாகணும். நாலு கிராமத்துக்கு ஒரு ஜெனரேட்டர் வெச்சு, அந்த மக்களுக்கு சார்ஜ் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணி கொடுக்கலாம்...’ என்று சொன்னாராம். ‘நீங்க சொல்றது நல்ல யோசனைதான் அதிகாரிகள் மட்டத்தில் சொல்லி உடனே பேச சொல்றேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார்.
இப்படி வரும் தவல்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக்கொள்கிறார் முதல்வர். அந்தத் தகவல்களை எல்லாம் களத்தில் இருக்கும் அமைச்சர்களுக்கும் அப்டேட் செய்கிறார். ‘இதெல்லாம் என்னனு கவனிங்க. பிரச்சினைகளை சீக்கிரம் தீர்க்க யாரு வழி சொன்னாலும் கேட்டுக்கலாம்...’ என்று அவர்களை அலர்ட் செய்கிறாராம் பழனிசாமி.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றைத் தட்டிவிட்டது.
“துணை முதல்வர் பன்னீர் செல்வம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் பார்த்த பிறகு இன்று முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘நிவாரணப் பணிகள் சரியாகத்தான் நடந்துட்டு இருக்கு. நீங்க வரலை என்ற கோபம் மட்டும்தான் மக்கள்கிட்ட நல்லாவே தெரியுது. ரெண்டு நாள் நீங்க இங்கே வந்து ஒரு விசிட் அடிச்சிட்டாலே போதும். மக்கள் சமாதானம் ஆகிடுவாங்க. அதனால் எவ்வளவு சீக்கிரம் ப்ளான் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ப்ளான் பண்ணிட்டு நீங்க வந்துட்டுப் போயிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு உளவுத் துறை மூலமாக விசாரித்திருக்கிறார் முதல்வர். ‘மக்கள் கோபம் முன்பு அளவுக்கு இல்லை. நீங்க போறதால பெரிய சிக்கல் எதுவும் வராது..’ என்று அவர்கள் சொல்ல... ‘நாளைக்கே நான் கிளம்பி வர்றேன்’ன்னு பன்னீரிடம் சொல்லியிருக்கிறார். 

No comments

Powered by Blogger.