யாருடனும் இணைந்து பணியாற்றத் தயார்: கமல்

கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றத் தயார் என்று கமல்
தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (நவம்பர் 22) டெல்டா மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கஜா புயல் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 6 நாட்களாக மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளைப் பொருட்களாக வழங்கி வருகிறோம்.
பல ஊர்களிலிருந்து நிவாரண பொருட்களைப் பெற்றுவருகிறோம், பணமாக அல்லாமல் பொருளாகவும் செயலாகவும் மக்களுக்குப் பயன்படும் வகையில் உதவி செய்துவருகிறோம். மக்கள் நீதி மய்யத்தின் அழைப்பின் பேரில் கேரளாவில் வெள்ள பாதிப்பின்போது சிறப்பாகப் பணியாற்றிய தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நிவாரணத் தொகையாக எத்தனை ஆயிரம் கோடி தேவை என்பதைப் பிரதமரிடம் முதல்வர் தோராயமாகக் கேட்பதைவிட இங்கு வந்து ஆய்வு செய்து, அதன் பிறகு நிவாரணத்தைக் கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர்களுக்கு எதிராக மக்களைப் போராட எதிர்க்கட்சி தூண்டி விடுகிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது. நிவாரணப் பணிகள் மக்களிடம் சென்று சேர விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறப்படுவதை நான் நேரில் சென்று பார்த்த பிறகுதான் கூற முடியும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அதற்கு ஏற்றாற்போல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்தார்.
மீனவர்களுக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறிய கமல், கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் அழிவாக அறிவிக்கப் பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்தியக் குழு தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, நடிகர்கள் யாரும் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று பார்க்கவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல், நடிகர்களும் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகர் சங்கமும் உதவி செய்யும் என்றார்.
புயல் பாதித்த பிறகு கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படாமல், அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்றத் தயார், அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.