இந்தியாவின் ரஷித் கானா குல்தீப்?

சுழல் பந்துவீச்சில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவருகிறார் குல்தீப் யாதவ்.
சர்வதேச டி -20 போட்டிக்கான இந்திய அணியின் சுழல் பந்துவீச்சைப்
பொறுத்தவரை ஹர்பஜன், அஸ்வினுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா ஓரளவுக்கு நம்பிக்கையளித்து வந்தார். ஆனாலும் ஒரு முழு நேரப் பந்துவீச்சாளருக்கான இடம் காலியாகவே இருந்துவந்தது. அந்த இடத்திற்கான போட்டியில் தற்போது சாஹலும், குல்தீப் யாதவ்வும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பான பந்துவீச்சுடன், இடது கை பந்துவீச்சு எனும் சாதகத்துடனும் களமிறங்கும் குல்தீப், இந்த ரேஸில் சாஹலை முந்துவார் என்றே அறிய முடிகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி 20 யில் இந்தியா 4 ரன்களில் தோற்றாலும், தனது பங்கைச் சிறப்பாகச் செய்து முடித்த குல்தீப், 4 ஓவர்கள் பந்துவீசி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 24 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
எந்தப் போட்டியிலும் ரன் ரேட்டிங்கைத் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளும் குல்தீப், இந்தப் போட்டியின் வாயிலாக புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அதாவது டி 20 களில் சிக்கனமாக ரன்னை விட்டுக்கொடுப்பதில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் முதலிடத்தில் இருந்துவருகிறார். அவரது போட்டி சராசரி 12.40 மற்றும் ஓவர் சராசரி 6.05 ஆகும். இந்நிலையில், தற்போது குல்தீப் இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது போட்டி சராசரி 12.45 ஆகவும் ஓவர் சராசரி 6.95 ஆகவும் உள்ளது.
அதுபோல முதல் 15 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக அளவில் முதலிடத்தில் உள்ளார் குல்தீப். இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 29 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலுள்ளார். இந்திய அணியின் சாஹல் 27 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.