மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகளை மன்னார் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைத்துள்ளது.


குறித்த வழக்கு மீதான மனு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மன்னார், திருக்கேதீஸ்வரம் மற்றும்  மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு, 778-2013 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையிலுள்ள எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்ற அடிப்படையில், அம்மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடுநர் தரப்பிலும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி கட்டளையை வழங்க இருந்தார்.

ஆனால் இன்றைய தினம் அதற்கான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், நீதவான் ரி.சரவணராஜா விடுமுறையில் இருந்தமையால் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் வழக்கின் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட பதில் நீதவான், எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படுமென உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக சிரேஸ்ட அரச சட்டத்தரணி நவாவி மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்” என  சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net #Mannar #Thirukeethiswaram #Mannthai

No comments

Powered by Blogger.