மீ டூ: விசாரணைக் குழு அமைத்த ஒரே கட்சி!

அரசியல் கட்சிகளிலேயே பாலியல் புகார்கள் உள்ளிட்ட பெண்களின்
பிரச்சினைக்காக குழு அமைத்துள்ள ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிதான் என்று தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா முழுதும் மீ டூ புயல் கிளம்பியது. பெண்கள் தாங்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் அத்துமீறல்களை பதிவிட்டு, அதற்குக் காரணமானவர்களையும் அம்பலப்படுத்தினார்கள். மத்திய இணை அமைச்சர் அக்பர் தன் பதவியையே ராஜினாமா செய்யும் அளவுக்கு மீ டூ புயல் வீசியது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இந்தியாவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார். அதில், “பெண்கள் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிடவும், விசாரிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். கட்சி என்பதும் ஒரு பொது நிறுவனம்.எனவே ஒவ்வொரு கட்சியிலும் பெண்கள் தங்களுக்கு எதிரான புகார்களை முறையிட ஒரு குழு அமைத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஆறு தேசியக் கட்சிகள், 59 மாநிலக் கட்சிகள் என்று மொத்தம் 65 கட்சிகளுக்கு மேனகா காந்தி இந்தக் கடிதத்தை அனுப்பினார்.
ஆனால், இந்தக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான உள்கட்சி விசாரணைக் குழுவை அமைத்திருப்பதாக அமைச்சருக்கு பதில் எழுதியிருக்கிறது. இந்த விவரம் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மூலமாகவே ஆங்கில ஊடகங்களில் செய்தியாக வந்திருக்கிறது.
மேனகா காந்திக்கு மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், “பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டம் 2013 மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர் உடனே மார்க்சிஸ்ட் கட்சியில் இத்தகைய ஒரு குழு அமைக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மூன்று வருடத்துக்கு ஒருமுறை கட்சியின் அகில இந்திய செயற்குழுக் கூடும்போது இந்த கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி எங்கள் கட்சியின் இணைய தளத்திலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.
பெண்களுக்கான உரிமைகளைப் பல கட்சிகள் பேசிக் கொண்டிருக்க, செய்து காட்டியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

No comments

Powered by Blogger.