ஹீரோவாக வரும் யோகி பாபு

முன்னணி நாயகர்களின் படங்கள் என்றால் யோகி பாபு அதில் கட்டாயம் இடம்பெறுவார் என்ற நிலை தற்போது
கோலிவுட்டில் உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ள யோகி பாபு கதாநாயகன் அரியணை ஏறுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.
கூர்கா படத்தில் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறேன்; கதாநாயகனாக நடிக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் யோகி பாபு. ஆனால் தர்மபிரபு படத்தின் போஸ்டர் வெளியான பின் அப்படியான விளக்கங்கள் அவரிடம் இருந்து வரவில்லை. எமதர்மராஜாவாக அவர் இடம்பெற்றிருந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. முத்துகுமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கத்தில் விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படம் உருவாகி வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ள தர்மபிரபு படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எமலோகத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் கருணாகரன் கதாபாத்திரத்திற்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாகியுள்ளது. படத்திற்காக எமலோகம் போன்ற பிரம்மாண்டமான அரங்கு சென்னையில் அமைக்கப்பட்டுவருகிறது. டிசம்பர் 14ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படம் தவிர கூர்கா, அஜித்தின் விஸ்வாசம், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன், ஜீவாவின் கொரில்லா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.