குழாய் மூலம் எரிவாயு: பிரதமர் அடிக்கல்

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு பிரதமர்
நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
நாடு முழுவதும் 18 மாநிலங்களிலுள்ள 122 மாவட்டங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு டெல்லியில் இன்று (நவம்பர் 22) காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தில் தமிழகத்தின் கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக கோவை கொடிசியா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 66 மாவட்டங்களில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று, 174 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது. இனிவரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் 400 மாவட்டங்களாக அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இது முதல்படியாக விளங்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றினால் இயற்கை எரிவாயு முனையங்களை அதிகப்படுத்த முடியும். தேசிய எரிவாயுத் தொகுப்பை ஏற்படுத்த அரசு செயலாற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம், தமிழகத்தில் சேலம் மற்றும் கோவையில் எரிவாயு விநியோக திட்டத்திற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.