களத்தில் திரண்ட திரையுலகினர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்குத் திரையுலகினர் நேரில் சென்றும், முதல்வர் நிவாரண நிதிக்கும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தும் பணியாற்றிவருகின்றனர்.கஸ்தூரி

நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 23) கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னையிலிருந்து அனுப்பிவைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில், 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு அனுப்பி, நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளேன்.

1000 குடும்பத்திற்குத் தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர்கள், போர்வைகள், கொசு மருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.

உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளில் இருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர்ப் பற்றாக்குறை பூதாகரமாகத் தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் மிகப்பெரிய தேவையாக இருக்கப் போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்புக் கருவிகளை அனுப்புகிறோம்.

இந்த சுத்திகரிப்புக் கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்துச் செல்லலாம், சுலபமாகப் பயன்படுத்தலாம். தண்ணீர் எவ்வளவு மாசுபட்டிருந்தாலும், தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.

பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை. இரண்டு வருடங்களுக்குக் குறையாமல், செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்குக் கிடைக்கிறது. இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாகத் தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி.

மேலும், ரஜினி அனுப்பிய பொருட்களைக் கூட நமது தம்பிகள்தான் நிர்வகிக்கின்றனர். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமாகச் செயல்படவேண்டும். நமக்குத் தெரியாத ஆட்கள் மூலமாக உதவிகள் போய்ச்சேர்வதைவிட, தெரிந்தவர்கள் மூலமாக போய்ச் சேர்வது நல்லது” என்றார்.

விவேக்

இதனிடையே, கஜா புயலால் ஏற்பட்டுள்ள இழப்பை தன் வீட்டில் ஏற்பட்டுள்ள இழைப்பாகக் கருதி உதவ முன்வர வேண்டுமென நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சம் முதல்வரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த விவேக், “குடிநீர், இருக்க இடம், உணவு, உடை என எல்லாவற்றிற்கும் மேல் மருந்துகள் இதெல்லாம் நான் எடுத்துக் கொண்டு போகிறேன். எல்லோரும் அதையே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள மக்கள் அந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணத்தில் செய்கிறேன். இதே போல் எல்லோரும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆறுதல் சொன்ன இயக்குநர்கள்

மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (57). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். கஜா புயலினால் சுந்தரராஜின் தென்னந்தோப்பில் உள்ள 400 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், ஒரு ஏக்கரில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களும் சேதமாகின. இதனால் கடந்த நான்கு நாட்களுக்கும் மேல் விரக்தியில் இருந்த அவர் நேற்று (நவம்பர் 22) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் ஆகியோர் சுந்தரராஜின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அத்துடன், 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினர். மேலும், பொருளாதார வசதியுள்ளவர்கள் சுந்தரராஜ் குடும்பத்துக்கு உதவி செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

No comments

Powered by Blogger.