மக்கள் ஓரங்கட்டியவர்களை ஆட்சியில் அமர்த்தி ஜனாதிபதி பாரிய தவறிழைத்துள்ளார்: ரணில்

மக்களால் ஓரங்கட்டப்பட்டவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய தவறிழைத்து விட்டதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் தேர்தலுக்கு அஞ்சவில்லை என்றும், ஆனால் நீதியான ஒரு அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்தவே போராடுவாதாகவும் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரத்தில், உலகில் எந்தவொரு சபாநாயகரும் முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு, கரு ஜயசூரிய முகம் கொடுத்தார்.
எனினும் சபாநாயகர் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக செயற்பட்டார். இதற்காக நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். தற்போது அவர்கள் சபாநாயகருக்கு ஏசுகின்றனர். அவர் செய்த தவறு என்ன? நிலையியற் கட்டளையை நடைமுறைப்படுத்தியதா?.
நாட்டின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்தவை ஓரம்கட்டவேண்டும் என, ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வாக்களித்தனர். ஆனால் இங்கு என்ன நடந்துள்ளது. மக்கள் வேண்டாம் என நிராகரித்தவர்களை ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளார். இது தான் ஜனநாயகமா?
இது இப்படியே நீடித்தால் என்ன நடக்கும். வாக்குபலம் இல்லாமல் போகும், நாடாளுமன்ற பலம் குறையும், மக்களின் எதிர்காலம் இல்லாமல் போகும். அந்த உரிமைகளை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.
நாம் தேர்தலுக்கு செல்ல அஞ்சவில்லை. ஆனாலும் நீதியான ஒரு அரசாங்கத்தின் கீழ் நாம் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இல்லையேல் அரசியலமைப்பிற்கு அமைய அது சட்டரீதியான தேர்தலாக அமையாது” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.